நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசு அதிகாரி மூலம் திமுக முறைகேடு செய்துள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடன் நான் வெளியிட்ட அறிக்கையில், ஆளும் கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது என்றும். தேர்தல் நூறு விழுக்காடு சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அதிமுக வெற்றி பெற்றி இருக்கும். நடந்து முடிந்த தேர்தல் முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல என்று குறிப்பிட்டு இருந்தேன். என்னுடைய கூற்று தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின்மூலம் நிருபிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 10 வது வார்டில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட பழனி செல்வி என்பவரும் , திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி என்பவரும் தலா 284 வாக்குகள் பெற்றனர். இந்த நிலையில் குலுக்கல் முறையில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டவர் வெற்றி பெற்றதாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு ,பின்னர் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக மாற்றப்பட்டு ,வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சுயேச்சை வேட்பாளரால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு குலுக்கல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவினை பார்வையிட்டுவிட்டு, முடிவு மாற்றி அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததுடன் , தொடர்புடைய தேர்தல் அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் முன்பு நேரில் ஆஜரான தேர்தல் அதிகாரி , திமுக வேட்பாளர் தரப்பில் கொடுக்கப்பட்ட அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாகவே, முடிவை மாற்றி விட்டதாக கூறியிருக்கிறார் . ஒரு அரசு அதிகாரி திமுகவினரால் மிரட்டப் படுகிறார் என்றால் சாதாரண வேட்பாளர்கள் எம்மாத்திரம். திமுகவினரின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது.
இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர் தகுந்த ஆதாரத்துடன் சாதுரியமாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி அதன் காரணமாக அவருக்கு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இவரைப்போல துணிச்சலாக நீதிமன்றத்தை அணுகாதவர்கள், வசதியின்மை காரணமாக, திமுகவினரின் மிரட்டலுக்கு பயந்து, விவரம் இன்மை போன்ற பல்வேறு காரணங்களால் நீதிமன்றத்தை அணுகாதவர்கள் என பல பேர் இருக்கிறார்கள்.
இதைப்போல வாக்குப்பதிவில் ஆங்காங்கே முறைகேடுகள் நடந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த முறைகேடுகள் நடைபெறாமல் இருந்திருந்தால் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பண பலம், படை பலம், அதிகார பலம் வெற்றி பெற்றிருக்கிறது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு, பணநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
**-வினிதா**