தயாநிதி மாறன் பேச்சு குறித்து தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகத்தை கடந்த மே 13ஆம் தேதி ஒருங்கிணைவோம் வா திட்ட மனுக்கள் கொடுப்பது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் சந்தித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி தயாநிதிமாறன், தங்களை தலைமைச் செயலாளர் அவமானப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், “நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?” என்று அவர் கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்காக தனது வருத்தத்தை தயாநிதி மாறன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். எனினும், இந்தப் பிரச்சினையில் தயாநிதிமாறனுக்கு எதிராக பாஜக தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. அவருக்கு எதிராக டிஜிபியிடமும், காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டன. இதுதொடர்பாக [தயாநிதிமாறனை கைது செய்ய தீவிரமாகும் பாஜக](https://minnambalam.com/politics/2020/05/19/12/dayanidhi-maran-arrerst-pressure-from-bjp) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் தயாநிதி மாறன் பேசியது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை ஆரம்பித்துள்ளது தேசிய பட்டியலினத்தோர் ஆணையம். இதுதொடர்பாக பட்டியலினத்தோர் ஆணைய அதிகாரி ஏ.பி.கவுதம், தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர ஆணையர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “தயாநிதி மாறன் பேசியது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பட்டியலினத்தோர் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 338 இன் படி இதுதொடர்பான விசாரணையை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தயாநிதி மாறன் பேசிய நாள் உள்ளிட்ட விவரங்கள், குற்றத்தின் தன்மை ஆகியவற்றை கடிதம் கிடைத்த அடுத்த 7 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே முரசொலி நிலம் தொடர்பான விவகாரத்திலேயே தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டு எழுந்தது. அந்த வகையில் தற்போது, தயாநிதி மாறன் விவகாரத்தையும் பாஜக அரசியலாகவே எதிர்கொள்வதாக திமுகவினர் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன்தான் தற்போது தமிழக பாஜகவின் தலைவராக இருந்து வருகிறார். இவர் முரசொலி விவகாரம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
**எழில்**
�,”