வேதா இல்லம் தொடர்பாக மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதி வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அதிமுக அரசு அரசுடைமையாக்கியது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நவம்பர் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், வேதா இல்ல சாவியைத் தீபா தீபக்கிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி [கேட்டு மனுத் தாக்கல் செய்தார்](https://minnambalam.com/politics/2021/12/01/37/admk-cv-shanmugam-apeal-against-veda-illam-case-verdict).
அதில், இவ்விவகாரம் தொடர்பாக மேல் முறையீடு செய்ய மாநில அரசு அக்கறை காட்டாததால் வேதா இல்ல அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல்முறையீடு செய்வதாகத் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி வேதா இல்ல சாவியை ஒப்படைத்துவிட்டால் அது கட்சிக்குப் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். வேதா இல்லத்தைக் கையகப்படுத்தும் முன் தீபா தீபக்கிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் கையகப்படுத்தியதை ரத்து செய்த உத்தரவு தவறானது. தனி நீதிபதி சேஷசாயி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்தச்சூழலில், நீதிமன்ற உத்தரவுப்படி டிசம்பர் 10ஆம் தேதி தீபா தீபக்கிடம், சென்னை ஆட்சியர் விஜயதாரணி வேதா இல்ல சாவியை ஒப்படைத்தார். அன்றைய தினமே இருவரும் வேதா இல்லத்துக்குச் சென்று வீட்டைத் திறந்து சுற்றிப்பார்த்தனர்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 15) நீதிபதிகள் பரேஷ் உபாத்யா, சதிகுமார் சுகுமார குருப் ஆகியோர் அடங்கிய அமர்வு, வேதா இல்ல தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி வழங்கினர். அதன்படி அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அரசு தங்கள் தரப்பு பதிலைத் தெரிவிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நினைவு இல்லம் விவகாரத்தில் அதிமுக சம்பந்தப்பட்ட தரப்பு அல்ல என்று கூறமுடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
**-பிரியா**
�,