கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் தனது கணக்கைத் துவங்கியுள்ளது. ஓமனில் இருந்து தமிழகம் திரும்பிய 45 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோலவே அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த சிறுவன், நேபாளத்திலிருந்து சென்னை வந்த ரயில்வே ஊழியர் உள்பட 4 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.
சட்டமன்றம் இன்று (மார்ச் 9) கூடியதும் பேராசிரியர் க.அன்பழகன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டுமென திமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர சபாநாயகருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றக் கூட்டம் முடிந்ததும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா வைரஸ் பாதிப்பை பரவாமல் தடுப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு சம்பந்தமான விஷயங்களை சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கினார். முதல்வர் சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
**எழில்**
�,