பெண்களை இழிவுபடுத்தியதாக உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.
திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்வில், “மோடிக்கு எடுபிடியாக ஆட்சி செய்து வருவதால் எடப்பாடி ஆட்சியை எடுபிடி ஆட்சி எனக் கூறுகிறோம். டெட்பாடி ஆட்சி என்கிறார்கள். சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு’ என்றதோடு மோசமான வார்த்தை ஒன்றையும் தெரிவித்தார்.
இதனைக் கேட்டு நிகழ்வில் பங்கு பெற்றிருந்த கட்சி நிர்வாகிகளும் சிரித்தனர். 36 விநாடிகள் மட்டும் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், உதயநிதிக்கு எதிராக கண்டனங்கள் வலுக்கின்றன.
சசிகலாவின் சகோதரி மகனும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன், உதயநிதிக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி என்று கூறியுள்ளார்.
நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி. பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிப்பதாக கண்டனம் தெரிவித்தார்.
நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம், பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா எனக் கேள்வி எழுப்பினார். எவ்வளவு அருவருப்பான வார்த்தை அது. உதயநிதி சொன்னது நகைச்சுவை அல்ல. பெண்களைப் பற்றி இரட்டை அர்த்தத்தில் தெளிவாகக் கூறிய மோசமான வார்த்தைகள் அவை. வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக திமுகவால் எதையாவது பேச முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.
கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிடேடின் கூடுதல் இயக்குனராக பணியாற்றுவதாக குறிப்பிட்டுள்ள கிருத்திகா, “அருவறுப்பானது. இதுபோன்ற பேச்சை நாங்கள் கேட்க விரும்பவில்லை. இதுக்கு மேல ஒரு அசிங்கம் உண்டா?” என உதயநிதியின் பேச்சுக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தார். நடிகை கஸ்தூரி, எப்போதும் அதே நினைப்புதான் போல என தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுபோலவே உதயநிதிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
*எழில்*�,