சிஏஏவுக்கு எதிராக முதல்வரைச் சந்தித்து இஸ்லாமிய இயக்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகத் தமிழகத்தின் பல இடங்களில் இஸ்லாமியர்கள் இரவு பகல் என்று போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும், பல இடங்களின் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும், சிஏஏவால் யாருக்கும் பாதிப்பில்லை என முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் என்பிஆரில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விருப்பமிருந்தால் மட்டும் பதில் சொல்லலாம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை (மார்ச் 3) சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை சென்றார். கோவை விமான நிலையத்தில் முதல்வர் செல்லும் வழியில் நின்று ஐக்கிய ஜமாத் அமைப்பினர் அவரைச் சந்தித்தனர். சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை மனுவும் அளித்தனர். மேலும், இதுதொடர்பாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் முதல்வருக்கு விளக்கினர்.
கோரிக்கைகள் குறித்துப் பரிசீலிப்பதாக அவர்களிடம் உறுதியளித்த முதல்வர், சிஏஏ உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் சிறிது நேரம் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் ஜப்பார், “என்பிஆர், என்ஆர்சியை அமல்படுத்துவது அச்சத்தை ஏற்படுத்துவதாக முதல்வரிடம் கூறினோம். முதல்வர் எங்களிடம் சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு எப்போதும் துணை நின்று வருகிறது. சிஏஏ உள்ளிட்டவை குறித்து பலர் பலவிதமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதெல்லாம் உண்மையல்ல. இது பிற்காலத்தில் உங்களுக்குத் தெரியவரும் என்று தெரிவித்தார். அவரின் பேச்சு எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.
**- எழில்**
�,