இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உட்பட 8 பேருக்கு அண்ணா பதக்கம்!

Published On:

| By Balaji

குடியரசு தின விழாவில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உட்பட 8 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் அண்ணா பதக்கம் வழங்கினார்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் இன்று குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் வீரதீர செயல்பாடுகளுக்கான அண்ணா பதக்கத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதில் சென்னை தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு விருது வழங்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மயங்கி விழுந்து கிடந்த உதயகுமார் என்ற இளைஞரை தன் தோளில் சுமந்து சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர் போலீஸ் அதிகாரி ராஜேஸ்வரி.

இதுமட்டுமின்றி ஓட்டேரி பகுதியில் புயல் பாதுகாப்பு ரோந்து பணியின்போது, இடிந்த வீட்டுக்குள் சிக்கியிருந்த கணேஷ் என்ற இளைஞரை மீட்டார். அதுபோன்று காணாமல் போன பழனி என்ற சிறுவனையும் மூன்று மணிநேரத்தில் கண்டுபிடித்தார்.

மேலும் சாலையோரத்தில் வசிக்கும் ஏழ்மையான பெண்களுக்கு இவர் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

அதுபோன்று திமுக பிரமுகரான தனியரசுவுக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. திருவொற்றியூரில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த சமயத்தில் உடனடியாக செயல்பட்டு மக்களை வீடுகளை விட்டு வெளியே கொண்டு வந்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டது.

அதுபோன்று விழுப்புரம் மாவட்டம் திருவத்தி அருகே உள்ள ஆதிவூரைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்ற தீயணைப்பு வீரருக்கு விருது வழங்கப்பட்டது.

கடந்த பருவமழையின் போது தென்பெண்ணை மற்றும் மல்லாடாறு கரை பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 24 மணி நேரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரண்டு பேரை காப்பாற்றியதற்காக இவ்விருது வழங்கப்பட்டது.

கோவை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சின்னதம்பி என்ற யானையைப் பிடிக்கும் பணியில் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் யானை அருகே சென்று மயக்க ஊசி செலுத்தியதற்காக, கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் அசோகன் என்பவருக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

மதுரை ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் கண்மாய்க்குள் விழுந்து கிடந்த காரில் இருந்தவர்களைத் துரிதமாகச் செயல்பட்டு மீட்டதற்காகச் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கும்,

புதுக்கோட்டைக் கிராமத்தில் கிணற்றில் விழுந்த தாய் மகனைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட சிறுவன் லோகிக் என்பவருக்கும்,

திருப்பூர் அருகே குளிக்கச் சென்ற 6 சிறுமிகள் வாய்க்காலில் இழுத்துச் செல்லப்பட்டபோது அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட திருச்சி பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சொக்கநாதன் என்பவருக்கும்,

திருப்பூர் கல்லி மேட்டுப்பாளையம் பிஏபி வாய்க்காலில் குளிக்கச் சென்ற மாணவிகள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட போது அவர்களைக் காப்பாற்றிய பேச்சியம்மாள் என்ற பெண்ணுக்கும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share