நீட் விலக்கு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப தமிழக ஆளுநர் தாமதித்து வருகிறார் என்று தமிழகத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முறையிட திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டு அக்குழு அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றது. ஆனால் அமித் ஷாவை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் சட்டமன்றத்திலேயே அமித் ஷாவை கடுமையாக விமர்சித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதையடுத்து இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஜனவரி 8 ஆம் தேதி கூட்டினார் தமிழக முதல்வர். அந்தக் கூட்டத்தில், ‘நீட் விவகாரம் தொடர்பாக அமித் ஷா அழைத்தால் மீண்டும் அவரை சந்திப்பது’ என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் பொங்கலுக்கு முன்னதாகவே, ஜனவரி 17 ஆம் தேதி தமிழக எம்பிக்கள் குழுவை சந்திக்க அமித் ஷா நேரம் ஒதுக்கினார். அதன்படி நேற்று (ஜனவரி 17) மாலை டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தனர் டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பிக்கள்.
திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் நவநீத கிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் ஜெயக்குமார், மதிமுக சார்பில் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ரவிக்குமார், சிபிஎம் சார்பில் நடராஜன், சிபிஐ சார்பில் ராமச்சந்திரன், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் அமித் ஷாவை சந்தித்தனர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “ ஏற்கனவே இருமுறை உள்துறை அமைச்சர் அவர்களது ஷெட்யூல் மற்றும் பனி மூட்டம் காரணமாக டெல்லி வர இயலாமையால் எங்களை சந்திக்கவில்லை. அதை போன் மூலம் தொடர்புகொண்டு தெரிவித்தார்கள்.
இந்த நிலையில்தான் இன்று உள்துறை அமைச்சரை சந்தித்தோம். தமிழக முதல்வர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான கோரிக்கை மனுவை, நீட் விலக்கு தொடர்பான மனுவை உள்துறை அமைச்சரிடம் கொடுத்திருக்கிறோம். ஏற்கனவே தமிழகத்துக்கு நீட் விலக்கு குடியரசுத் தலைவர் கொடுத்திருக்கிறார். அதேபோன்ற நீட் விலக்கை தமிழகத்துக்கு அளிக்கலாம் என்று சுட்டிக்காட்டி வலியுறுத்தினோம்.
இந்த பிரச்சினை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர், கல்வித் துறை அமைச்சர் ஆகியோருடன் கலந்து பேசி தமிழக முதல்வரிடம் தெரிவிக்கிறேன் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ளச்சேத நிவாரணத் தொகை 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும் என்று அளித்த மனுவையும் உள்துறை அமைச்சரிடம் அளித்தோம். ஜனவரி 31 க்குள் தமிழகத்துக்கு வேண்டிய நிதியை அளிக்கிறேன் என்று உறுதியளித்தார். உள்துறை அமைச்சரை சந்தித்த பிறகு ஒரளவு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார் டி.ஆர்.பாலு.
இடையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “குடியரசு தினத்தன்று நடைபெறும் பேரணியில் வ உ சி, வேலுநாச்சியார் , பாரதியார் ஆகியோரை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் அகற்றப்பட்டுவிட்டதாக செய்தி வந்திருக்கிறது என்று சொன்னதும் அமித் ஷா ஆச்சரியப்பட்டார். அதுபற்றி கவனிக்கிறேன் என்றும் கூறினார்” என்று தெரிவித்தார்.
**-வேந்தன்**
[மோடியுடன் பூ பாதையா சிங்கப் பாதையா? ஸ்டாலின் எடுத்த முடிவு!](https://minnambalam.com/politics/2022/01/13/28/stalin-modi-lion-root-flower-root-duraimurugan-trbalu-mansuk-mandavia-amitsha-welcome)
�,”