கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 22) நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை பொதுவெளியில் நடத்தத் தமிழக அரசு தடை விதித்தது.
விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவ வேண்டாம் என்றும், விநாயகர் சிலை ஊர்வலம், நீர் நிலைகளில் சிலைகளைக் கரைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், நாளொன்றுக்கு 6 ஆயிரம் என்ற அளவில் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் எப்படி அனுமதி வழங்க முடியும் என்று கூறி வழக்குத் தொடர்ந்தவர்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று, பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடகாவில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தற்போது அதிமுகவினருக்கும், பாஜகவினருக்கும் மத்தியில் ட்விட்டர் போர் வெடித்து வருகிறது.
அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், “ஆண்மை என்பது யாதெனில் சாரணர் தேர்தலில் வெற்றி பெறுதல். நவீன திருவள்ளுவர். #ஆண்மகன்” என்று சாரணர் தேர்தலில் தோல்வியடைந்த ஹெச்.ராஜாவை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிமுக மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன், “நீதிமன்றத்தைப் பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு, மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை, சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில், உங்கள் அரசியல் ஆண்மையை நிரூபியுங்களேன் ஹெச்.ராஜா” என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பாஜக ஐடி மற்றும் சமூக ஊடக மாநிலத் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், “இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதில் அண்ணன் தம்பியாக இருக்கிறார்கள் அதிமுகவும் திமுகவும்… இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி உண்டு , ஆனால் தமிழகத்தில் இல்லை..” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு பாஜகவும், அதிமுகவினரும் ட்விட்டரில் மோதிக்கொள்ளும் நிலையில், தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 20) மீண்டும் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “சென்னை உயர் நீதிமன்றத்தில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும் அரசின் ஆணையை பொது மக்கள் பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி, கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொது மக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**�,