கோவையில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த மாணவி பொன் தாரணி, தான் படித்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தொடர்ந்து அளித்த பாலியல் தொல்லையால் நேற்று முன்தினம் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டும், அனைத்தும் தெரிந்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாணவியின் சக மாணவர்கள் இன்று(நவம்பர் 13)போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில்,” பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழ்நாடு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அதுபோன்று திமுக எம்பி கனிமொழி,” ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதற வைக்கிறது. தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.
**-வினிதா**
�,