தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமனம் செய்வதை ரத்து செய்து தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிப்பது என்ற சட்டத்திருத்தம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியால் தாக்கல் செய்யப்பட்டு இன்று ஏப்ரல் 25 நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்படும் போது பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கினார்.
“ஆளுநர்கள் மூலம் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுவதை ரத்து செய்துவிட்டு மாநில அரசே துணைவேந்தர்கள் நியமனம் செய்வது என்ற இந்த சட்டத்தை தமிழக பாஜக எதிர்த்து சட்ட மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது.
இந்த மசோதா மீது சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “1949 இலேயே குஜராத்தில் மாநில அரசுதான் துணைவேந்தர்களை நியமனம் செய்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 1949 இல் இருந்த அரசியலைப் போலவா இன்றைய அரசியல் இருக்கிறது?
ஆளுனர் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த சட்டத்தை திமுக கொண்டு வந்திருக்கிறது. துணைவேந்தர்கள் பதவியை வியாபாரப் பொருளாகவும் ஆளுங்கட்சியை சேர்ந்த ஆளுங்கட்சிக்கு ஆதரவான மனிதர்களுக்கு கொடுக்கும் பதவியாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
துணைவேந்தர்களை நியமிக்கும் தற்போதைய முறையில் தேடுதல் குழு இருக்கிறது. அதில் மாநில அரசு சார்பாக ஒருவர், சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினர் ஒருவர், ஆளுனர் நியமிக்கும் உறுப்பினர் ஆகிய மூவர் அடங்கிய குழு தான் துணைவேந்தரை தேர்ந்தெடுக்கிறது. இந்த முறையில் மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது, சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்திற்கும் உரிமை இருக்கிறது, ஆளுநருக்கும் உரிமை இருக்கிறது. இந்த மூவர் குழு பதவிக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து மூன்று பேர்களைத் தேர்ந்தெடுத்து அதை ஆளுநருக்கு அனுப்புகிறார்கள். இந்த மூவரில் இருந்து ஒருவரை ஆளுனர் துணைவேந்தராக நியமிக்கிறார். இது கூட ஆளுநர் நேரடியாக நியமிப்பது கிடையாது. தேடுதல் குழுவில் மாநில அரசின் உறுப்பினர், பல்கலைக்கழக செனட் உறுப்பினர் இருவருமே கிட்டத்தட்ட மாநில அரசின் நபர்கள்தான் என்னும்போது
எங்கிருந்து பிரச்சனை வருகிறது? இது திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறு ஏதும் கிடையாது. நன்றாக செயல்பட கூடிய உயர் கல்வித்துறையில் அரசியலை புகுத்தி மாணவர்களை கெடுக்க திமுக நினைக்கிறது” என்று கூறிய அண்ணாமலை மேலும்,
“இதேபோன்ற சட்டத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் கொண்டு வந்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஒருவரை நியமனம் செய்து அதற்கு போட்டியாக அந்தக் குழு ஒரு துணைவேந்தரை நியமனம் செய்து பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் உயர் கல்வியிலும் ஏன் அரசியலை கலக்கிறீர்கள் என்ற அடிப்படையில்தான் பாஜக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது” என்றார் அண்ணாமலை.
**வேந்தன்**