சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30ஆம் தேதிவரை ஊரடங்கு பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சியால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் இந்த நாட்களில் எந்த இறைச்சிக் கடைகளும் திறக்கப்படக் கூடாது என்பதும் ஒன்று.
இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் முன்னாள் வக்ஃப் வாரிய தலைவர் ஹைதர் அலி, “ஆன்லைன் தவிர இறைச்சி உருவாக்கம், விற்பனை முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் என்ற அடிப்படையில் மளிகை, காய்கறி கடைகளுக்கு காலை 6 முதல் மதியம் 2 வரை செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பது போல் இறைச்சி கடைகளும் இயங்க அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவே நியாயமானது. இறைச்சி அத்தியாவசியம் இல்லை என்றால் காய்கறியும் அத்தியாவசியம் இல்லை என்று வாதிட முடியும்.
அரசியல் சாசனத்தின்படி பதவி ஏற்றுக்கொண்ட அரசு எடுக்கும் முடிவு அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். இறைச்சியையும் இறைச்சி உண்பதையும் தாழ்வாகக் கருதும் இது போன்ற உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். காய்கறிக் கடைகளைப் போல் இறைச்சிக் கடைகளும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 6 முதல் மதியம் 2 வரை இயங்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கூறியிருக்கும் ஹைதர் அலி,
“இறைச்சி கடையில் அதிக கூட்டம் கூடுவதால்தான் இந்தத் தடை என்பது ஏற்கத்தக்க வாதம் அல்ல, பல இடங்களில் காய்கறிக் கடைகளிலும் தான் அளவுக்கதிகமான கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது, மேலும் காய்கறிக் கடைகளை விட எண்ணிக்கையில் இறைச்சிக் கடைகள் குறைவாகவே இருக்கின்றன என்பதையும் நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதையும் தவிர இறைச்சிக் கடைகளில் ஞாயிற்றுக் கிழமைகளில் தான் கட்டுக்கடங்காத கூட்டம் வரும். அடுத்த இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளிலும் (ஜூன் 21, 28) எந்தக் கடைகளும் இயங்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முழுமையான தளர்வற்ற ஊரடங்கு நடைமுறையில் இருக்கப் போகிறது. எனவே ஜூன் 21, 28 நீங்கலாக மற்ற நாட்களில் இறைச்சிக் கடைகளுக்கு விதிக்கப்பட்ட முழுத் தடையை நீக்கி நேரக் கட்டுப்பாட்டை மட்டும் விதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் பேசியபோது, “இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி என்று கூறினால் மீன் மார்க்கெட்டுகளையும் அனுமதிக்க வேண்டும். கடந்த சில வாரங்களில் சென்னையில் மீன் மார்க்கெட்டுகளில் அலைமோதிய கூட்டத்தை எல்லாரும் பார்த்திருக்கிறார்கள். இறைச்சிக் கடைகளை மட்டும் அனுமதித்துவிட்டு மீன் மார்க்கெட்டுகளை அனுமதிக்காவிட்டால் அதுவும் பிரச்சினையாகும். காய்கறிக் கடைகளில் கூட்டம் கூடிவிடக் கூடாது என்பதால்தான் இரண்டு கிலோ மீட்டருக்குள் உள்ள கடைகளுக்கு போக வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இதில் பேதம் பார்க்கிறோம் என்று சொல்வது துரதிர்ஷ்டவசமானது” என்கிறார்கள்.
**-வேந்தன்**�,