Nஇனி சனிக்கிழமையும் கிடையாது!

Published On:

| By Balaji

தமிழகத்தில் இனி சனிக்கிழமைகளிலும் மீன், இறைச்சிக் கடைகள் செயல்பட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் தீவிரமாக இருக்கும் கொரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆரம்பத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்பு, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திரையரங்குகள், உடற்பயிற்சிக்கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள், பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை.

சென்னை மாநகராட்சி உள்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை. புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம்.ஹோட்டல், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் நேற்றிலிருந்து அமலில் உள்ளன.

மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், அதற்கு முந்தைய நாளில், அதாவது சனிக்கிழமையன்று காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சிக் கடைகளிலும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இன்றியும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். இது தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இறைச்சிக்கடைகளையும் சனிக்கிழமைகளில் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 1ஆம் தேதி மற்றும் இனி வருகின்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் மீன், கோழி, கறிக்கடைகள் இயங்கக்கூடாது. அதாவது, தொடர்ச்சியாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளை திறக்கக் கூடாது, இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share