ராஜன் குறை
சாதாரண மக்களுக்குக் கூட தெளிவாக புரியும், அவர்கள் பொதுவெளிகளில் பேசிக்கொள்ளும் விஷயம் ஒன்று உண்டானால் அது பாரதீய ஜனதா கட்சியே அ.இ.அ.தி.மு.க-வில் அரங்கேறும் நாடகங்களுக்கு பின்னால் இருக்கிறது என்பதுதான். மலைப்பாம்பினால் சுற்றி வளைக்கப்பட்ட ஆட்டு குட்டி போல அ.இ.அ.தி.மு.க-வின் நிலை இருக்கிறது. பொம்மலாட்ட பொம்மைகள் போல இரட்டை தலைமை என்கிறார்கள், ஒற்றை தலைமை என்கிறார்கள், பேச்சு வார்த்தை என்கிறார்கள், இணைகிறது என்கிறார்கள், உடைகிறது என்கிறார்கள், ஜெயலலிதா இறந்ததிலிருந்து கேட்டுக் கேட்டு புளித்துப் போய் விட்டது இந்த ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் – சசிகலா அரசியல்.
இவர்கள் மூவருமே மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியால் மிக மோசமாக நடத்தப்பட்டாலும் அதை எதிர்த்து அரசியல் செய்யும் துணிவோ, ஆகிருதியோ இல்லாதவர்கள். இவர்கள் மீது வழக்குகள் இருக்கின்றன, அதனால்தான் பயப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. லாலு பிரசாத் யாதவ் மீது இல்லாத வழக்கா? அவர் எப்படி சிறையிலிருந்தாலும், எத்தனை வழக்கு போட்டாலும் தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்து வருகிறார்? ஏனெனில் அவருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இவர்கள் மூவரும் எந்த அரசியல் ஆகிருதியும் மக்கள் செல்வாக்கும் இல்லாமல் ஜெயலலிதாவை அண்டிப் பிழைத்தவர்கள். அதனால் இவர்களால் பாரதீய ஜனதாவை எதிர்ப்பதை நினைத்தும் பார்க்க முடியாது. பிறகு ஏன் நான் தலைவர், நீ தலைவர் என்று காட்சி அரசியல் நடத்துகிறார்கள்?
இந்த நாடகங்களுக்கு காரணம் ஊடகங்கள். ஒரு வார காலமாக தொலைக்காட்சி ஊடகங்கள் இவர்கள் பிரச்சினையைத்தான் பேசுகின்றன. ஏதோ மிக முக்கியமான அரசியல் மாற்றங்கள் நிகழ்வதைப்போல மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றன. கடந்த ஓராண்டாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் அன்றாட முன்னெடுப்புகள் ஊடக கவனத்தை பெற்று வந்தன. முதல்வர் ஸ்டாலின் தினமும் ஓயாமல் புதிய திட்டங்கள். அறிவிப்புகள், செயல்பாடுகள் என தீவிரமாக பணியாற்றி வருகிறார். இப்படியே சில ஆண்டுகள் போனால் பின்னர் தி.மு.க மக்கள் மனதில் முழுமையாக குடிகொண்டுவிடும் என்ற ஒரு அச்சம் நிலவுகிறது. தி.மு.க அரசை குறை சொல்ல எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பே இல்லாதால் எதிர்கட்சிகள் செயல்படவில்லை என்று ஒரு கருத்து உருவாகிறது. அதனால்தான் இரட்டைத் தலைமை, ஒற்றைத்தலைமை என்று ஏதாவது பூசல் செய்தாவது கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப முயற்சிக்கிறார்கள். இந்த நாடகங்களுக்கு ஊடகங்களும் ஒத்துழைப்பதால் அது மக்களின் கவனத்தை பெறுகிறது.
**அரசியல் அவலத்தின் உச்சம்**
அரசியலில் எல்லாமே சகஜம் என்ற ஒரு எண்ணம் மக்களிடையே நிலவுகிறது. அதாவது எத்தகைய தகிடுதத்தமும் செய்யலாம், கூசாமல் பொய் சொல்லலாம், முன்னுக்கு பின் முரணாகப் பேசலாம் என்று நினைக்கிறார்கள். அரசியல்வாதிகளை கேலி செய்ய உருவாக்கப்பட்ட புனைவுகள், குறிப்பாக திரைப்படக் காட்சிகள் இதற்கு துணை செய்கின்றன. ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி என்ற நகைச்சுவை நடிகர் உள்ளூர் அரசியல்வாதி பாத்திரத்தை ஏற்றிருப்பார். அவர் ஒரு கடையில் உள்ள தொலைபேசியில் சென்னையிலோ, டெல்லியிலோ உள்ள அரசியல் தலைவரை தொடர்பு கொண்டு பேசுவது போல நடிப்பார். அவர் பேசி முடித்தவுடன் கடைக்காரர் தொலைபேசியின் ஒயர் பிய்ந்து போயிருப்பதை காண்பிப்பார். கவுண்டமணி கவலைப்படாமல் “ஆரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்று கூறுவார். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற காட்சியாகும். அரசியலில் நிலவும் பொய்மையை கேலி செய்ய அமைக்கப்பட்ட காட்சி, அரசியலே பொய்யும், புனைசுருட்டும்தான் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் படுவதாக மாறிவிட்டது.
நான்கு ஆண்டுகளுக்குள் என்னென்ன முரண்பட்ட காட்சிகளை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும், சசிகலாவும் அரங்கேற்றி காட்டிவிட்டார்கள் என்பதை ஊடகங்கள் சுட்டிக் காட்டுவதே இல்லை. அ.இ.அ.தி.மு.க ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம் என்று அபத்தமாக ஓயாமல் கூறிக்கொண்டுள்ளார்கள். பெற்ற வாக்குகளே ஒன்றரை கோடி என்றால் வாக்களித்தவர்கள் எல்லோரும் தொண்டர்களா? சரி, இது ஒரு மிகையான கூற்று, தன்னிம்பிக்கைக்காக சொல்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டாலும் இந்த கட்சி மூன்று முக்கியமான பொய்களை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது.
முதல் பொய் ஜெயலலிதா குற்றமற்றவர் என்பது. எந்த குற்றங்களுக்காக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்தார்களோ அந்த வழக்கில் முதல் குற்றவாளி, அதாவது அக்யூஸ்டு நம்பர் ஒன் ஜெயலலிதாதான். நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதிகாரத்தில் இருந்தவர் ஜெயலலிதாதான். அதிகாரத்தை தவறாக பயன்படுத்திதான் சொத்து சேர்க்கும் குற்றம் நடந்துள்ளது. ஒரு குற்றத்திற்காக விசாரிக்கப்படுபவர்களில் உடந்தையாக இருந்தவர்கள் குற்றவாளி, ஆனால் நேரடியாக தன் அதிகாரத்தை பயன்படுத்தி குற்றம் செய்தவர் குற்றவாளி அல்ல என்று சொல்ல முடியுமா? ஆனால் தொடர்ந்து அது அப்படித்தான் என்று கூறி வருகிறார்கள். ஊடகங்களும் அனுமதிக்கின்றன. உச்ச நீதி மன்றத்தின் விரிவான தீர்ப்பை அதில் ஜெயலலிதாவை கண்டிக்கும் வரிகளை படிக்காததுபோல ஊடகங்களில் பேசுகிறார்கள்.
இரண்டாவது பொய், அ.இ.அ.தி.மு.க பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து மொத்த கட்சியும் அவர் காலில் விழுந்து அவரை அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சியது. பின்னர் சட்டமன்ற கட்சி கூடி அவரை முதல்வராக தேர்வு செய்து ஆளுனருக்கு தெரிவித்தது. எந்த அடிப்படையில் அவ்வாறு செயல்பட்டார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் விளக்க வேண்டும் அல்லவா? ஏன் அப்படி அவரை வணங்கி வழிபட்டு நின்றார்கள், பின்னால் ஏன் அவரை கட்சியை விட்டு நீக்கினார்கள் என்பதை எடுத்துக் கூற வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல பேசுகிறார்கள். ஊடகங்களும் ஏதோ நகைச்சுவை காட்சி என்பதுபோல கடந்து போய்விடுகின்றன.
மூன்றாவது மிகப் பெரிய பொய் கட்சியின் பொதுக்குழுவிற்கு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கவோ, அல்லது அந்த பதவியையே நீக்கவோ அதிகாரம் இருப்பதாக கூறுவது. இது வடிகட்டிய முழுப்பொய். சாதாரணமாக ஆங்கிலத்தை எழுத்துக் கூட்டி படிப்பவர்கள் கூட அண்ணா தி.மு.க விதிமுறையில் மிகத் தெளிவாக இந்த அதிகாரம் மட்டும் பொதுக்குழுவுக்கு கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பதை காணலாம். எந்த காரணத்தினாலோ இதில் ஏதோ சட்ட நுட்பம் இருப்பதாக அனைவரும் கருதுகிறார்கள். ஒரு நுட்பமும் இல்லை; புதிரும் இல்லை. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இறந்த பிறகு, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் எல்லோரும் வாக்களித்து இன்னொரு பொதுச் செயலாளாரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அது மட்டுமே சட்டப்படி செல்லுபடியாகும். மற்றபடி நடந்தது எல்லாமே கட்சியின் அமைப்பு விதிகளுக்கு செய்யப்பட்ட துரோகம். அதாவது நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு இழைக்கப்பட்ட துரோகம்.
**பன்னீர்செல்வம், பழனிசாமி, சசிகலா கொடுக்க வேண்டிய விளக்கங்கள்**
**பன்னீர்செல்வம் தர வேண்டிய விளக்கம்**
சசிகலாவை முதல்வராக்க சட்டமன்ற கட்சி தீர்மானம் செய்து ஆளுனருக்கு அனுப்பிய பின், திடீரென்று ஆட்டத்தை கலைத்தது பன்னீர்செல்வம்தான். அவர்தான் ஜெயலலிதா சமாதியில் சென்று தியானம் செய்தார். அதன் பிறகு தான் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதனை கண்டறிய தான் தர்மயுத்தம் தொடங்கியிருப்பதாகவும். விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இப்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை ஆணையத்திற்கு சென்று ஜெயலலிதா மரணத்தில் மர்மம் எதுவும் இல்லையென்றும், மக்கள் மத்தியில் ஐயத்தை போக்கவே தான் விசாரணை ஆணையம் அமைக்கக் கோரியதாகவும் கூறிவிட்டார். இது அப்பட்டமான பொய். அப்போது தர்ம யுத்தம் என்பதுதான் என்ன? எந்த தர்மம்? யாருடன் யுத்தம்? இவ்வளவு மோசமான சந்தர்ப்பவாத அரசியலை நடத்திவிட்டு எப்படி ஒருவர் இன்னமும் அரசியலில் தனக்கு ஒரு முக்கிய பங்கு இருப்பதாக கூறுகிறார், அதனை ஊடகங்களும் அனுமதிக்கின்றன? தொடர்ந்து அவர் முரண்பாடுகளை அம்பலப்படுத்த வேண்டாமா?
**பழனிசாமி தர வேண்டிய விளக்கம்**
பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்தை எதிர்த்து சசிகலாவும், தினகரனும் கூவாத்தூர் விடுதியில் அணிதிரட்டிய சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர்தான் பழனிசாமி. சசிகலாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்ற போது அவர் பாதம் பணிந்து, கரம் கூப்பி முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டவர். அதன் பிறகு ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் டி.டி.கே. தினகரனுக்கு வாக்கு சேகரித்தவர். பிறகு எதனால் பன்னீர்செல்வத்துடன் சமரசம் பேசினார்? ஏன் தினகரனுடன் உறவை முறித்துக் கொண்டார்? எதனால் சசிகலாவை புறக்கணித்தார்? தன்னுடைய முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்வதைத் தவிர வேறு எந்த அரசியல் காரணங்களையாவது அவர் கூற முடியுமா? இவ்வளவு அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல், ஒரு துளியும் வேறு எந்த நியாயங்களும் கூற முடியாதபடியான அப்பட்டமான கலப்படமற்ற சுய நலத்தை பார்க்க முடியுமா? எந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு முன்னால் இரட்டைத் தலைமைதான் இனிமேல் கட்சியின் எதிர்காலம் என்று கூறி தேர்தலை அறிவித்து இணை-ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்றுக்கொண்டார்? இப்போது ஏன் ஒற்றத்தலைமை என்று தூண்டிவிட்டு பன்னீர்செல்வத்தை ஓரம் கட்ட முயற்சிக்கிறார்? இவ்வளவு அப்பட்டமாக பதவியும், அதிகாரமும் மட்டுமே அரசியல் என்று ஒரு நபர் செயல்பட முடியுமா?
**சசிகலா தர வேண்டிய விளக்கம்**
ஜெயலலிதா போலில்லாமல் திராவிட முன்னேற்ற கழக தொடர்புள்ளவர் சசிகலா. அவர் கணவர் நடராஜன் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே ஜெயலலிதாவுக்கு பக்க பலமாக இருந்து அவர் அரசியல் வாழ்வில் முழுமையாக பங்கேற்றவர். சரியாகச் சொன்னால் இவர் இல்லாமல் ஜெயலலிதா இல்லை என்றே சொல்லலாம் என்னுமளவு ஜெயல லிதாவின் இணைபிரியாத நிழலாக மாறியவர். அவராலும், டி.டி.கே.தினகரனாலும் கட்சியில் வளர்த்து விடப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அப்படிப் பட்டவர் தனக்கெதிராக கிளர்ந்து எழுந்து ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என அபாண்டமாக குற்றம் சாட்டி, எடப்பாடி பழனிசாமியையும் தன்னிடமிருந்து தனிமைப் படுத்தியவரை எதனால் கண்டிக்கவே தயங்குகிறார் என்பது வியப்பாக இருக்கிறது. அவர் சிறையிலிருந்து வெளிவந்தபோது, தருவிக்கப்பட்ட கூட்டமோ, தானாக வந்த கூட்டமோ, பெங்களூரிலிருந்து சென்னை வரை சாலையில் மக்கள் கூட்டம் திரண்டு இருந்தது. அவர் உடனே தனக்கு துரோகம் செய்த ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இருவரையும் கண்டித்துவிட்டு, கட்சியை தன் பின்னால் அணிதிரள சொல்லி அரசியல் செய்திருக்க வேண்டுமல்லவா? ஏன் அவ்வாறு செய்யாமல் அரசியலை விட்டு விலகுவதாக சொன்னார்? தேர்தலையே சந்திக்காவிட்டால் கூட தன்னை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியவர்களை கண்டித்து பேச வேண்டாமா? இரட்டை த் தலைமை போன்ற ஏற்பாடுகள் கட்சி விதிகளுக்கு புறம்பானவை என்று வலியுறுத்தி பேச வேண்டாமா? எதனால் இது போன்ற கேள்விகளை கேட்காமல், தானே பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டு அரசியல் செய்கிறார்? ஏன் தன்னை “சாக்கடை ஜலம்” என்று கூறிய குருமூர்த்தியை கூட கண்டிக்க அஞ்சுகிறார்?
இப்படி இவர்கள் மூவரும் எந்த விளக்கமும் தராமல் அப்பட்டமான சுய நல அரசியல் செய்வதை எதனால் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் விடுகின்றன? இன்னொரு கோணமும் இருக்கிறது. அது என்னவென்றால் இவர்கள் மூவரும் எவ்வளவு சுய நல அரசியல்வாதிகளாக இருந்தாலும், இவர்கள் இல்லாமல் அ.இ.அ.தி.மு.க கட்சி பலவீனமடைந்தால் அந்த இடத்திற்கு பாரதீய ஜனதா கட்சி வந்துவிடும் என்பதுதான். இவர்கள் தொடர்ந்து இப்படி கட்சியை பலவீனப்படுத்தி வந்தாலும் பாஜக வளரத்தான் செய்யும். இவர்கள் மூவருமே பாரதீய ஜனதாவின் கரங்களில்தானே இருக்கிறார்கள்? இவர்களை பின்னிருந்து இயக்கியபடி பாஜக வளர்ந்தால் என்ன? இவர்கள் இல்லாமல் நேரடியாக வளர்ந்தால் என்ன? உண்மையில் இவர்களை பாஜக கேடயமாக பயன்படுத்தாமல், நேரடியாக களத்தில் நிற்பதே நல்லது என்றே தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த மூவராலும் அ.இ.அ.தி.மு.க கட்சியை மீண்டும் வலுப்படுத்துவது என்பது சாத்தியமேயில்லை. அ.இ.அ.தி.மு.க கட்சிக்குள் சில சத்துள்ள திராவிட இயக்கக் கூறுகள் இருக்குமானால் அவர்கள் பின்னாளில் அணிதிரட்டி தி.மு.க-விற்கான புதிய எதிர்கட்சியை உருவாக்குவார்கள். அதுவரை தி.மு.க ஆட்சி தொடர்வது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு மிகுந்த நன்மையே பயக்கும். போதும் இந்த நாடகங்களும், ஊடக பரபரப்புகளும். தமிழக அரசியலின் இந்த அவல அத்தியாயம் முடிவுக்கு வருவதே நல்லது.
**கட்டுரையாளர் குறிப்பு**
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com