மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் தவறானது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், இதில் 70 சதவிகிதம் அதாவது 27ஆயிரத்துக்கும் அதிகமானோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவ்வாறு தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னையில் மட்டும் ஜூன் 15ஆம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் பரவி வருகின்றன.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று (ஜூன் 12) முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று என்னுடைய பெயரில் தவறான ஒரு செய்தி வாட்ஸ் ஆப்பில் பரவி வருவதைப் பார்த்தேன். அப்படி எந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறானது. இந்தத் தவறான தகவலை வெளியிட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
சென்னை மக்கள் நெருக்கமும், குறுகலான சாலைகளும் நிறைந்த பகுதி. ஒரே வீட்டில் கிட்டத்தட்ட 8 பேர் வரை வசிக்கிறார்கள். சென்னை முழுவதும் 87 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். கொரோனாவைக் கட்டுப்படுத்த மண்டலத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த முதல்வர்,
“பொதுமக்கள் அரசு அறிவிக்கும் வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசியத் தேவைக்காக வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். வீடு திரும்பியவுடன் சோப்பு கொண்டு சுத்தமாக கைகழுவ வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும், “கொரோனா என்பது புதிய வகை நோய். அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகிறது. சாதாரண மக்கள் வாழும் தமிழகத்தில் இவ்வளவு கட்டுப்பாடுகள் இருப்பதே பெரிய விஷயம்” என்றும் குறிப்பிட்டார் முதல்வர்.
**எழில்**�,