வன்னியர் சமுதாயத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றப்பட்டது. தேர்தல் சமயத்தில் இயற்றப்பட்ட இந்த சட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆகியோர் இந்த சட்டம் தற்காலிகமானதுதான் என்று தெரிவித்தனர்.
இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மறுப்புத் தெரிவித்தார். தற்போது 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனிடையே இந்த உள் ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த சந்தீப் குமார் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாமே என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு இவ்வழக்கைப் பரிந்துரைக்கலாம் என்று கருதுகிறோம் என கூறினர்.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, இதே கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. எனவே இவ்வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் அவர், வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும் உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதால் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே வேலை மற்றும் கல்வியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். உரியக் கணக்கீடு இல்லாமல் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதைக்கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை முழுமையாக விசாரித்து தமிழக அரசின் கருத்தை அறிந்த பின்னரே முடிவு செய்ய முடியும். தற்போதைய நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி இந்த மனு தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த ஏப்ரல் மாதம் மதுரையைச் சேர்ந்த அபிஷ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவோடு இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
**-பிரியா**
�,