அரசு பேருந்துகளில் மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்!

Published On:

| By Balaji

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாணவர்கள் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது.

எனவே கல்வி நிறுவனங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 30) தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று மாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2021-22 கல்வியாண்டில் மாணவர்களுக்குக் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அனைத்து போக்குவரத்துக் கழகங்களால் வழங்கப்படும் வரை அரசு பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளி வரை சென்று வரக் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அது போன்று அரசு கல்லூரி அரசுப் பள்ளி தொழில்நுட்ப கல்லூரி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share