தொடர்ந்து இரண்டாவது முறையாக, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்கு வராத காரணத்தால் ராஜஸ்தான் மாநில துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருமான சச்சின் பைலட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்.
இன்று (ஜூலை 14) காலை ஜெய்ப்பூரின் புறநகரில் ஃபேர்மோண்ட் ஹோட்டலில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், “ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பேசியும் சமாதானம் ஆகாத சச்சின் பைலட்டை கட்சியில் இருந்தே நீக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். இதுபற்றி இன்று மதியம் மின்னம்பலத்தில் [செய்தி](https://minnambalam.com/politics/2020/07/14/38/remove-sachin-pilot-congress-mlas-urged-rajastan-clp)வெளியிட்டிருந்தோம்,
இந்நிலையில் கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா,
“காங்கிரஸில் சச்சின் பைலட்டுக்கு உயர்ந்த அங்கீகாரமும் பதவிகளும் கொடுத்து வைத்திருந்தோம். ஆனால், அவர் காங்கிரஸ் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் சதி வலையில் சிக்கிவிட்டார். சச்சின் பைலட் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் பாஜகவின் சதித்திட்டத்தால் திசைதிருப்பப்பட்டதற்கு வருத்தப்படுகிறேன். எட்டு கோடி ராஜஸ்தானியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கத்தை கவிழ்க்க அவர் பாஜகவுடன் இணைந்து சதி செய்கிறார். இது ஏற்றுக் கொள்ள முடியாதது. பிரச்சினையை பேசித் தீர்க்கலாம் என்று பைலட்டை பல காங்கிரஸ் உயர் மட்ட தலைவர்கள் அணுகினர். ஆனால் அவர் பேச மறுத்துவிட்டார். மேலும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது கூட்டத்துக்கும் அவர் வரவில்லை. எனவே அவரை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும், துணை முதல்வர் பதவியில் இருந்தும் நீக்குகிறோம்” என்று அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதல்வர் கெலாட், சச்சின் பைலட்டின் கைகளில் எதுவும் இல்லை,. இந்த நாடகத்தைப் பின்னால் இருந்து முழுக்க முழுக்க இயக்குவது பாஜகதான். அவர்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்டை கூட பாஜகதான் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் செய்த அதே சதி உத்தியை இங்கேயும் பின்பற்றுகிறார்கள். நீண்ட காலமாக பாஜக சதி செய்து குதிரை பேர வர்த்தகத்தில் ஈடுபடுவதால் கட்சி மேலிடம் இந்த முடிவை எடுத்திருக்கிறது” என்று கூறினார்.
தான் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்த சில நிமிடங்களில் தனது ட்விட்டரில் சச்சின் பைலட், “உண்மையை சித்திரவதை செய்ய முடியும். ஆனால் அதை ஒரு போதும் தோற்கடிக்க முடியாது” என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் நாளை காலை 10 மணிக்கு சச்சின் பைலட் செய்தியாளர்களை சந்திப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதற்கிடையில் முதல்வர் அசோக் கெலாட் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
ராஜஸ்தான் பாஜகவின் மேலிடப் பொறுப்பாளரான ஓம் மாத்தூர் இன்று ஜெய்ப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு மாநிலத்தின் அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க ஒரு கூட்டம் நடந்தது.
ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா, “காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது மக்கள் கோபமும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். உலகில் எந்த சக்தியும் அதைக் காப்பாற்ற முடியாது. இந்த அரசு அதிகாரத்தை இழக்கும். நாங்கள் விழிப்புடன் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
**-வேந்தன்**�,”