எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் விட்டுவிடுவோம்: காவல் துறை

Published On:

| By Balaji

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்ததற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்தது குறித்து எஸ்.வி.சேகர் வீடியோ பேசி வெளியிட்டார். அதில் தேசிய கொடி குறித்தும் பேசியிருந்தார். இதனால், தேசியக் கொடியை அவமதித்து வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், தேசியச் சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டம் பிரிவு 2-ன் கீழ் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னைக் கைது செய்யக்கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் காணொலி காட்சி மூலம் நேற்று (ஆகஸ்ட் 28) விசாரணைக்கு வந்தது. எஸ்.வி சேகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன், “குற்றப்பிரிவு அலுவலகத்தில் மனுதாரர் கடந்த முறை விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் கொடுத்த பின்னர், காவல்துறை 4 பக்க கேள்விகளைக் கொடுத்துப் பதிலளிக்கக் கூறியிருந்தனர், அவற்றிற்கு இன்று ஆஜராகி பதில் அளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், “தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என மனுதாரர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். நடந்தவற்றுக்கு நீதிமன்றத்தின் முன் அவர் மன்னிப்பு கோரினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது” என்று தெரிவித்தார். எனினும், இந்த வழக்கை ரத்துசெய்ய வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இதனையடுத்து நீதிபதி, காவல்துறை தெரிவித்துள்ளது தொடர்பாக மனுதாரர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி விசாரணையை வரும் செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share