மழையால் பாதிக்கப்படாத அளவுக்கு நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் முன் பட்ட குறுவை சாகுபடி மேற்க்கொள்ளப்பட்டு, ஜூன் மாதம் துவங்கி அறுவடைப் பணிகள் நடைப்பெற்று வருகிறது. அறுவடை செய்த நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் முழுமையாக உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படாததால் கொள்முதல் நிலைய வாயில்களில் சுமார் 5000 முதல் 10000ம் வரையிலான மூட்டைகள் நெல் குவியல்களாக குவிந்து கிடக்கிறது. தென் மேற்கு பருவ மழை துவங்கி பெய்து வருவதால் அதன் தாக்கத்தால் காவிரி டெல்டாவிலும் இரவு நேரங்களில் ஆங்காங்கு கோடை மழை பெய்து நனைந்து விடுகிறது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “அரசின் அலட்சியப் போக்கினால் கடலூர் மாவட்டத்தில் 20ஆயிரத்திற்கும் அதிகமான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
நெல்கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்திருப்பதாக அரசு சொன்னாலும், அவை உரிய வசதிகளுடனும் பாதுகாப்புடனும் இருப்பதில்லை. கடலூர் மாவட்டம் ராஜேந்திரபட்டணம் என்ற இடத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்திற்குச் சுற்றுவட்டார கிராமத்து விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெல்லை மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்த நிலையில், அதனை உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கு வழியின்றி அங்கேயே அடுக்கி வைக்கச் செய்துள்ளது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகளை மூடுவதற்கு தார்பாலின், ப்ளாஸ்டிக் ஷீட் போன்றவை போதிய அளவில் இல்லாததாலும், வெறுந்தரையிலேயே மூட்டைகளை அடுக்கியதாலும், அண்மையில் பெய்த கனமழையால், 20ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இந்த அவலம் தொடர்கிறது என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின்,
“ஏழை – எளிய விவசாயிகள் தங்கள் நெல்லைக் காய வைப்பதற்கு போதிய இடமின்றி, தார்ச்சாலைகளில் கொட்டி வைத்து வீணாகும் அபாயமும் ஏற்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அறுவடையைப் பார்க்கும் நெல் விவசாயிகள், அந்த அறுவடையில் கிடைத்த கண்மணிகளுக்கு இணையான நெல்மணிகள் வீணாவதைக் கண்ணீர் வழிந்தோடக் காணும் நிலைக்குத் தள்ளப்படுவது வேதனையிலும் வேதனையாகும்” என்றும் கூறியுள்ளார்.
மேலும், “விவசாயி விவசாயி என்று மூச்சுக்கு முந்நூறு தடவை தன்னைத்தானே கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, உண்மையான விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டம் பற்றிய கவனமும் இல்லை, கவலையும் இல்லை என்பதால், இதனை அவர் பார்வைக்குக் கொண்டு வந்து, உரிய நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. பருவமழையால் பாழ்படும் நெல்மூட்டைகளைப் பாதுகாத்து, அவற்றை விரைவாகக் கொள்முதல் செய்து, விவசாயிகளின் வாழ்க்கையையும் நலனையும் உரிய நேரத்தில் காப்பாற்றித் தர வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.
**எழில்**�,