அமித் ஷாவுக்காக காத்திருந்த ரஜினி- எந்நேரமும் வெளியாகலாம் அறிவிப்பு!

Published On:

| By Balaji

நவம்பர் 21 ஆம் தேதி சென்னை வந்து அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அன்றிரவு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ஆடிட்டர் குருமூர்த்தி நள்ளிரவில் சென்று சந்தித்துள்ளார். சுமார் பத்து நிமிடங்கள் அவர் அமித் ஷாவுடன் பேசியபோது ரஜினி பற்றியும் பேசியிருக்கிறார்.

ரஜினியின் உடல் நிலை பற்றிய ஓர் வாட்ஸ் அப் அறிக்கையும் அதற்குப் பிறகான ரஜினியின் விளக்கமும் அளிக்கப்பட்டு பரபரப்பாக இருந்த நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி சில வாரங்களுக்கு முன்பு ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார். இதுபற்றி மின்னம்பலத்தில், [ரஜினியை சந்தித்த அமித் ஷா தூதர்](https://minnambalam.com/politics/2020/11/02/14/rajini-meet-amit-sha-messenger-auditor-gurumoorthy) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ரஜினியின் சந்திப்பு பற்றியும் ரஜினியின் எண்ண ஓட்டம் பற்றியும் அவர் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் அமித்ஷாவிடம் குருமூர்த்தி தெரிவித்திருக்கிறார். அமித் ஷாவும் ரஜினி பற்றிய தனக்கும் வரும் தகவல்களை வைத்து அவர் மீதான எதிர்பார்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டுவிட்டார் என்கிறார்கள்.

ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்களில் இதுகுறித்து பேசும்போது, “ரஜினிக்கு இன்னமும் உள்ளூர அரசியல் ஆசை இருக்கிறது. அரசியலுக்கு வந்து மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. முப்பது வருடங்களாக வருகிறேன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது வரமாட்டேன் என்று சொல்ல அவருக்கு முழு இஷ்டம் இல்லைதான்.

ஆனால், தனது நெருங்கிய நண்பரும் பின்னணிப் பாடகருமான எஸ்பிபியின் மரணம் ரஜினியை வெகுவாக பாதித்துவிட்டது. ரஜினியின் குடும்பத்தினரையும் எஸ்பிபியின் மரணம் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டது. அதை ஒட்டித்தான் பொதுவாழ்க்கை செல்ல வேண்டாம் என்ற முடிவில் ரஜினி உறுதியாகிவிட்டார்.

இதன் பின்னால்தான் ரஜினி பற்றிய உண்மையான மருத்துவ தகவல்களோடு அந்த வாட்ஸ் அப் அறிக்கை வெளியானது. அதுபற்றியும் ரஜினி விளக்கம் அளித்து, தன்னுடைய முடிவை விரைவில் மக்களுக்கு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

அந்த வகையில் ரஜினி, தனது அரசியல் முடிவை அதாவது தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்ற முடிவை அமித் ஷா சென்னை வருவதற்கு சில நாட்கள் முன்பே அறிவிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அமித் ஷா சென்னை வருகை பற்றிய தகவல்கள் வெளியான நிலையில், அவர் சென்னை விசிட்டை முடித்துக்கொண்டு செல்லட்டும் அதன் பிறகு அந்த அறிவிப்பை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தன் நிலைப்பாட்டை அமித் ஷாவுக்காக மாற்றிக் கொண்டிருக்கிறார். அமித் ஷா சென்னை வந்து சென்றுவிட்ட நிலையில், இனி எந்த நேரத்திலும் ரஜினியிடம் இருந்து அந்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம்” என்கிறார்கள்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel