ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை தனது அரசியல் கட்சியில் இணைய அழைப்பு விடுக்கவுள்ளார் ரஜினிகாந்த் என்கின்றன ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
தனது அரசியல் திட்டங்கள் குறித்து சென்னையில் இன்று (மார்ச் 12) செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், அரசியல் மாற்றத்திற்காக மூன்று திட்டங்களை வகுத்துள்ளேன் என்று கூறினார். அவர் சொன்னதன் முக்கிய சாரம்சம், “கட்சியில் தேர்தல் நேரத்தில் மட்டுமே பதவிகள் இருக்கும். 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை வீடு தேடி சென்று அழைத்து கட்சியில் இணைப்பேன். முதல்வர் பதவியில் அமரமாட்டேன், நல்லவர்களை அதில் அமரவைப்பேன். திமுக, அதிமுகவை வீழ்த்துவேன்” என்பதுதான்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் வீடு தேடிச் சென்று சந்திக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளில் முக்கியமானவராக சகாயம் ஐ.ஏ.எஸ். இருப்பார் என்கிறார்கள். .
மக்களுக்கான மாவட்ட ஆட்சியர் என்று பெயரெடுத்தவர்களில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் முக்கியமானவர். சில ஆண்டுகளாக சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற கோரிக்கை பல தரப்பிடமிருந்து எழுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பதிலளித்த சகாயம், “நான் என்றைக்கு ஊழலை எதிர்க்க ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து அரசியலில் இருக்கிறேன் என்றுதான் பொருள். அது தேர்தல் அரசியலா என்பது என்னுடைய சமூகம் முடிவு செய்யும். என்னுடைய சமூகம் விழித்தெழுகிற போது அது நிச்சயமாக இதுகுறித்து முடிவு செய்யும்” என்று பதில் தெரிவித்திருந்தார்.
மக்கள் பாதை என்னும் அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் சமூகப் பணியாற்றி வருவதோடு, ‘இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்’ என தொடர்ச்சியாக அழைப்பு விடுத்துவருகிறார் சகாயம். மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்தவர்கள் அண்மையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, அதிகாரிகளை திணறடிக்கும் அளவுக்கு கேள்விகளை எழுப்பினர்.
சகாயத்தின் இப்படியான பணிகளை அறிந்துவைத்திருக்கும் ரஜினி சமீபத்தில் இது தொடர்பாக சகாயம் ஐ.ஏ.எஸ்.சிடமும் பேசியிருக்கிறார். தான் ஆரம்பிக்கும் கட்சியில் அவரை இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளார் ரஜினி . இதற்காக அவரை வீடு தேடிச் சென்று நேரில் அழைக்கவும் ரஜினி முடிவு செய்திருக்கிறார். ஒருவேளை நல்லாட்சிக்காக ரஜினி சுட்டிக்காட்டும் முதல்வர் வேட்பாளராக சகாயம் இருந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.
**எழில்**�,