வருத்தம் போதாது மன்னிப்பு கேட்க வேண்டும்: தயாவுக்கு எதிராக போராட்டம்!

Published On:

| By Balaji

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தை மே 13 ஆம் தேதி சந்தித்தபோது, அவர் தங்களை அவமதித்தாக திமுக எம்பிக்கள் புகார் கூறினர். அப்போது, “தாழ்த்தப்பட்டவர்கள் போல எங்களை நடத்தினார்” என்று தயாநிதிமாறன் சொல்லிய வார்த்தை பெரும் சர்ச்சையாக மாறியது. இதையடுத்து, “13.05.20 தமிழக அரசின் தலைமைச்செயலாளரை சந்தித்தது குறித்து நான் அளித்த பேட்டியின் போது, தலைமை செயலாளர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில்தான் கூறியிருந்தேனே தவிர எவருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு சிறிதும் இல்லை. யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார் தயாநிதிமாறன்.

தயாநிதிமாறனின் வருத்த அறிவிப்பு வருவதற்கு முன்பே அதிமுக ஆதரவு நிலைப்பாடு கொண்ட பல்வேறு பட்டியலின இயக்கங்கள் முக நூல் போராட்டங்களை அறிவித்தனர். அந்த வகையில் தயாநிதிமாறனைக் கண்டித்து புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் இன்று ( மே 15) காலை முகநூல் வழியாக கண்டன ஆர்பாட்டம் நேரலையில் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் பேசிய புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி,

“சில மாதங்களுக்கு முன் திமுக எம்பியான ஆலந்தூர் பாரதி தாழ்த்தப்பட்ட மக்களை அவமதித்துப் பேசினார். அதை பலர் கண்டித்தும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. அந்த தைரியத்தில்தான் இப்போது தயாநிதிமாறனும் பேசியிருக்கிறார். தயாநிதிமாறன், எந்த தாழ்த்தப்பட்ட மக்களும் தனக்கு வாக்களிக்கவில்லை என்று சொல்லுவாரா? அவர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா?

திமுக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காதது வேதனையாக இருக்கிறது. தயாநிதிமாறன் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தயாநிதிமாறன் வருத்தம் தெரிவித்தால் போதாது. பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களும் திமுகவுக்கு சரியான நேரத்தில் பாடம் கற்பிப்பார்கள்” என்று பேசினார்.

இந்த ஆர்பாட்டத்தில், “கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் திராவிட போர்வையிலே சாதியை வளர்க்கும் திமுகவை கண்டிக்கின்றோம். கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் தலித் மக்களை இழிவுபடுத்திய தயாநிதி மாறனை கண்டிக்கின்றோம். தலித் மக்களை பொது தளங்களில் திட்டம் தீட்டி இழிவுபடுத்தும் திமுகவின் சாதிய போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்” என்பன உள்ளிட்ட பல முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share