தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் தரம் இல்லை என்று புகார் வந்துள்ள நிலையில் இனி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி விநியோகிக்கப்படும் என்றும் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.
குறிப்பாக, விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களின் பணியை மேம்படுத்த மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள்/எடையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும். மாநில அளவில் விற்பனையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.15,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும். அதுபோன்று எடையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.6,000, மூன்றாம் பரிசு ரூ.4,000 வழங்கப்படும்.
மாவட்ட அளவில் விற்பனையாளர்களுக்கு முதல் பரிசாகரூ.4,000 , இரண்டாம் பரிசாக ரூ.3,000, அதுபோன்று எடையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000, இரண்டாம் பரிசாக ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள் (கேழ்வரகு ) வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான 260 கிடங்கு வளாகங்களில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.50 கோடி மதிப்பீட்டில் முழுமையாகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கணினி மயமாக்கப்படும். தபால் மூலம் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பி வைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டார் அமைச்சர் சக்கரபாணி.
**-பிரியா**