செல்லூர் ராஜுவுக்குப் பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி

Published On:

| By admin

சித்திரைத் திருவிழா நடைபெறும் போது அணில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருந்த நிலையில், அதற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதற்கு விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அணில் வயர்களை கடிப்பதால் மின் தடை ஏற்படுவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நேற்றைய விவாதத்தின் போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. அதனால் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், அணில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று நகைச்சுவையாகப் பேசினார். இது அதிமுக உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. அப்போது செந்தில் பாலாஜி இதற்குப் பதிலளிக்கவில்லை.

ஆனால் நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் மின் தடையில்லை எனத் தெரிந்து ‘தடை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்கிறார் தெர்மோகோல் விஞ்ஞானி. எங்கள் பணியை நாங்கள் சிறப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்” என்று விமர்சித்துள்ளார்.

இந்த பதிவுக்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில், தமிழகத்தில் பல இடங்களில் மின் தடை இருப்பதாகவும், அணில் ஸ்மைலியை பதிவிட்டும் வருகின்றனர்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share