{புதிய மணல் குவாரி முடிவை கைவிடுங்கள்: ராமதாஸ்

Published On:

| By Balaji

தமிழகத்தில் கட்டுமான தேவைகளுக்கான ஆற்று மணலின் ஒரு பகுதியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு, மாநிலம் முழுவதும் கூடுதல் மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மலேசிய மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இருப்பில் வைக்கப்பட்டுள்ள மணலை 10 மாதத்திற்குள் விற்கவும் இனிமேல் வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்வதை நிறுத்தவும், பொதுப்பணித் துறை ஆணை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், புதிய மணல் குவாரிகளை திறப்பது எந்த வகையிலும் சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ்,

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணலின் விலை உயர்ந்து விட்டதும், அந்த விலைக்கு இறக்குமதி மணலை வாங்க எவரும் தயாராக இல்லை என்பதும் தான் மணல் இறக்குமதிக்குத் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்வதற்கான காரணங்கள் என்று கூறப்படுகிறது. இது உண்மையல்ல.

2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி கொரோனா தொற்று பரவல் தொடங்கும் வரை மொத்தம் 5.20 லட்சம் டன் மணல் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்த மணல் முழுவதும் ஒரு யூனிட் ரூ.10,000 என்ற விலைக்கு விற்றுத் தீர்ந்து விட்டது.

மணல் விற்பனை அண்மைக்காலமாக குறைந்திருப்பதற்கு காரணம் கொரோனா தொற்றால் கட்டுமானப் பணிகள் முடங்கியிருப்பது தானே தவிர, அதிக விலையால் அல்ல. தமிழகத்தின் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் ஆற்று மணல் யூனிட்டுக்கு ரூ.12,000 வரை விற்கப்பட்ட நிலையில், இறக்குமதி மணல் விலை அதை விட குறைவு தான்.

ஒருவேளை, இறக்குமதி மணலுக்கான தேவை குறைந்து விட்டதாக வைத்துக் கொண்டாலும் கூட, அது தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறப்பதற்கான காரணமாக இருக்க முடியாது. மாறாக, ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்பதற்காகத் தான் மணல் இறக்குமதியை தமிழக அரசு திட்டமிட்டு கைவிடுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

குவாரிகளை அமைத்து மணல் எடுப்பதால், ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை கணக்கில் கொண்டு பார்க்கும் போது, உள்ளூர் மணலின் விலையை விட இறக்குமதி மணலின் விலை 5 மடங்கு அதிகமாக இருந்தாலும் கூட, அதன் விற்பனையைத் தான் அரசு ஊக்குவிக்க வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் கேரளத்துக்குக் கொண்டு சென்று விற்கப்படும் ஒரு சரக்குந்து மணலின் விலை ரூ.50,000 என்ற உச்சத்தைத் தொட்ட போதிலும், அம்மணலைப் பயன்படுத்துவதைத் தான் கேரளம் ஊக்குவித்ததே தவிர, மணல் குவாரிகளை அனுமதிக்கவில்லை. காரணம்… சுற்றுச்சூழல் மீது கொண்டுள்ள அக்கறை” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், தமிழகத்தில் காவிரி, கொள்ளிடம், பாலாறு, தென்பெண்ணை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் சில ஆண்டுகளுக்கு முன் 46 மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதால் தமிழகத்தில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டன.

மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி அன்புமணி ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இப்போதும் நடத்தி வருகிறார்.

அரசியல் ரீதியாகவும், சட்டப்படியும் போராடி மூடப்பட்ட மணல் குவாரிகளை யாரோ சிலரின் லாபத்துக்காக மீண்டும் திறக்கக்கூடாது. அவ்வாறு திறப்பது தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்கு பெருங்கேடு விளைவித்து விடும்.

காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் குவாரிகள் அமைத்து 60 அடி ஆழம் வரை மணல் தோண்டி எடுக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குள் கடல் நீர் ஊடுருவி விட்டது; பல ஆயிரக்கணக்கான கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பாசன நீர் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

மணல் கொள்ளையால் ஆற்று மட்டம் குறைந்து, அதில் எவ்வளவு நீர் ஓடினாலும் பாசனக் கால்வாய்களில் நீர் பாய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இவை உள்ளிட்ட ஏராளமான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் மணல் குவாரிகளை மீண்டும் திறப்பதென்பது பெரும் தீமையாகும்.

ஆற்று மணல் குவாரிகளை திறப்பதால் அரசுக்கு பொருளாதார ரீதியாகவும் எந்த பயனும் கிடைக்காது. 2003 ஆம் ஆண்டு ஆற்று மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தத் தொடங்கியதிலிருந்து இன்று வரை பெரும்பாலான ஆண்டுகளில் மணல் விற்பனை மூலம் அரசுக்கு சராசரியாக ரூ.80 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது.

மாறாக, இடைத்தரகர்கள் தான் பல்லாயிரக்கணக்கான கோடி லாபம் பார்க்கின்றனர். ரூ.80 கோடி லாபத்துக்காக விலைமதிப்பற்ற சுற்றுச்சூழலை அழித்து விடக்கூடாது. மாறாக, மணல் இறக்குமதியை ஊக்குவிப்பதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய், கட்டுமானத்துக்குத் தடையற்ற மணல் விநியோகம் ஆகியவற்றுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பதை அரசு உணர வேண்டும்.

எனவே, 15 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, தமிழகத்தின் ஆறுகளில் 5 கி.மீக்கு ஒரு தடுப்பணை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த வேண்டும். மணல் இறக்குமதியையும், எம். சாண்ட் உற்பத்தியையும் அதிகரித்து கட்டுமானத்துக்குத் தட்டுப்பாடின்றி மணல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share