நியூட்ரிசியன் கிட் டெண்டர்: அமைச்சர் எச்சரிக்கை – அண்ணாமலை பதில்!

Published On:

| By admin

அண்ணாமலை கூறிய தவறான குற்றச்சாட்டுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை எனில் துறை சார்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நியூட்ரிசியன் கிட்டில் ஊழல் நடந்துள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். பொங்கல் தொகுப்பில் முறைகேடு செய்த அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்துக்கு நியூட்ரிசியன் கிட் டெண்டர் வழங்குவதன் மூலம் 45 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. அதோடு அயன் சிரப் வாங்குவதில் 32 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 14) செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அண்ணாமலை சுகாதாரத் துறையில் 77 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆவின் நிறுவனத்திடம் ஹெல்த் மிக்ஸ் வாங்காமல், ப்ரோ பி.எல் ஹெல்த் மிக்ஸை வாங்குவதாகவும் கூறியிருந்தார். ஆனால் ஆவின் மிக்ஸ் இன்னும் தயாரிக்கப்படவில்லை. தயாரிப்பதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது. எனவே இல்லாத ஒன்றைக் கற்பனையாக நினைத்துக்கொண்டு பேசுகிறார். இந்த கிட்டை குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்போகிறார்கள், இதற்காகக் கையூட்டு பெற்றிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.
கடந்த வாரம் டெண்டருக்கான டெக்னிக்கல் பிட் திறக்கப்பட்டது. டெண்டரில் பங்கேற்பதற்குத் தகுதியுள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று (நேற்று) காலை டெண்டரில் பங்கேற்பவர்கள் யார் என முடிவெடுத்திருக்கிறார்கள். அதனடிப்படையில் அண்ணாமலை கூறிய அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்துக்குப் பதிலாக பாலாஜி சர்ஜிக்கல் என்ற நிறுவனம் டெண்டரை பெற்றிருக்கிறது.
காழ்ப்புணர்ச்சியோடு அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திய அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதுதான் நல்ல அரசியலுக்கு அடையாளம். வருத்தம் தெரிவிக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் உயிர்காக்கக் கூடிய இந்தத் துறையில் குறைகள் இருந்தால் நிச்சயம் சுட்டிக்காட்டலாம். யார் சுட்டிக்காட்டுகிறார் என்பது விஷயம் அல்ல. யார் சுட்டிக்காட்டினாலும் குறைகள் இருந்தால் நிச்சயமாகக் களையப்படும்” என்று கூறினார்.
அமைச்சரின் விளக்கத்தைத் தொடர்ந்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்தப் பயனும் இல்லை. கருப்பு பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனத்திடம் முறைகேடாகப் பணம் பெற்று ஊட்டச்சத்து தொகுப்பு டெண்டரை வழங்கப்போவதாக ஆதாரங்களைத் தமிழக பாஜக வெளியிட்டது.
அந்த டெண்டரில் பங்கேற்ற வேறொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகச் செய்தியைப் பார்த்தோம். தமிழக பாஜக வைத்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக வேறு வழியின்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், எங்கள் குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
லஞ்ச ஒழிப்புத் துறையில் தமிழக பாஜக அளித்த புகாரையும் திமுக அரசு விசாரித்து குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். மேலும், ஆவின் ஹெல்த் மிக்ஸ் நிலை என்ன என்பதையும் திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share