எம்.எல்.ஏ பிரபுவுடன் செல்ல மனைவி சௌந்தர்யாவுக்கு அனுமதி!

Published On:

| By Balaji

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யா தொடர்பான ஆட்கொணர்வு வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தனி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபுவும், தியாகதுருகம் மலையம்மன் கோயிலில் குருக்களாக பணியாற்றி வரும் சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யாவும் அக்டோபர் 5ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து, எம்எல்ஏ பிரபுவால் தனது மகள் கடத்தப்பட்டதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.

இவ்வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சௌந்தர்யாவையும் அவரது தந்தை சுவாமிநாதனையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 9) விசாரணைக்கு வந்தது. அப்போது, சௌந்தர்யாவும் அவரது தந்தை சுவாமிநாதனும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரிடமும் நீதிபதிகள் தனித் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது சுவாமிநாதன் தரப்பில், சௌந்தர்யாவிற்கு 15 வயது இருக்கும்போதே அவரை ஆசைவார்த்தை கூறி காதலிக்க வைத்துவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. சவுந்தர்யா தரப்பில், தந்தையுடன் செல்ல விரும்பவில்லை எனவும், கணவருடன் செல்ல விரும்புவதாகவும் கூறப்பட்டது.

தொடர்ந்து, இரண்டு பேரும் தனியாக பேச அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் அரை மணி நேரம் பேசினர். அதன்பின்னரும், தனது முடிவில் சௌந்தர்யா உறுதியாக இருந்ததை அடுத்து அவரை கணவர் பிரபுவுடன் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன், சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவும் முடித்துவைக்கப்பட்டது.

இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தந்தை சுவாமிநாதன், “நீதிமன்றத்தில் தனியாக பேச அனுமதிக்கப்பட்டபோது, நான் பேசுவது எதையுமே சௌந்தர்யா கேட்கவில்லை. என் முகத்தைக் கூட பார்க்கவில்லை. அந்த அளவுக்கு மூளைச்சலவை செய்து மனதை கலைத்துள்ளனர். வயது வித்தியாசம் காரணமாகவே திருமணத்தை எதிர்க்கிறேன்.

என்னை அப்பா எனவும், எனது மனைவியை அம்மா எனவும் அழைத்து ஒரு மகனைப் போல இருந்தவர் பிரபு. தங்கை போல பழகியவரை திருமணம் செய்துகொள்ளலாமா. 15 வயதிலேயே காதலைச் சொல்லி மேஜர் ஆகும்வரை காத்திருந்து திருமணம் செய்துள்ளனர். இதுதொடர்பாக மேல்முறையீட்டுக்குச் செல்லுவேன்” என்று கூறியுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share