பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஒத்திவைப்பு: அமைச்சர் பொன்முடி

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில், அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறவிருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1066 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு 1.38 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு அக்டோபர் 28,29,30,31 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 129 மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முறைகேடுகளை தடுப்பதற்காக தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்வு மையங்கள் தேர்வர்களின் ஊரிலிருந்து பல நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் ஒதுக்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(அக்டோபர் 25) வெளியிட்ட அறிக்கையில், ”பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடுகள் நடப்பதைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு தேர்வர்களுக்கான தேர்வு மையங்கள் வெகு தொலைவுக்கு அப்பால் ஒதுக்கப்பட்டு உள்ளன. உதாரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பல தேர்வர்களுக்கு மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், நெல்லை மாவட்டதேர்வர்களுக்கு திருவண்ணாமலை, நீலகிரி மாவட்டத்தினருக்கு திருவாரூர் என மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கருவுற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்தில், எந்த மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாகத் தான் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வர்களை இதைவிட கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்க முடியாது. தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு செல்ல ஒரு நாள் பயணம், ஒரு நாள் ஓய்வு என குறைந்தது இரு நாட்களுக்கு முன்பே செல்ல வேண்டும்; அங்கு அறை எடுத்து தங்க வேண்டும். இதற்காக தேர்வர்கள் ரூ.4000 ரூ.6000 வரை செலவழிக்க வேண்டியிருக்கும். இது அனைவருக்கும் சாத்தியம் அல்ல.

அதுமட்டுமின்றி, சராசரியாக 400-500 கிலோ மீட்டர் பயணித்து, பழக்கம் இல்லாத இடத்தில் தங்கி, விடுதிகளில் கிடைக்கும் உணவை உட்கொண்டு தேர்வு எழுதுவது மிகவும் கொடுமையானதாகும். அதிலும் தீபாவளி திருநாளுக்கு ஒரு சில நாட்கள் முன்பாக, முழு அளவில் தொடர்வண்டிகளும், பேருந்துகளும் இயக்கப்படாத சூழலில் தேர்வர்களை இவ்வாறு அலைக்கழிப்பது பெரும் தண்டனையாகும். இது தேர்வர்களை கடுமையாக பாதிக்கும். இத்தகைய சூழலில் மிகச்சிறப்பாக தேர்வுக்கு தயாரானவர்களால் கூட வெற்றி பெற முடியாமல் போகும். இது சம வாய்ப்பு கொள்கைக்கு எதிரானது.

விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. ஆனால், அதற்காக தேர்வர்களை அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சென்று தேர்வெழுத வைப்பது நிச்சயமாக நல்ல சீர்திருத்தம் அல்ல. விரிவுரையாளர் போட்டித் தேர்வு ஆன்லைன் முறையில் தான் நடத்தப்பட உள்ளது. தேர்வு முறையை தவறுகளே செய்ய முடியாத அளவுக்கு மாற்றினால், எந்த முறைகேட்டையும் செய்ய முடியாது.

அதேபோல், ஆன்லைன் தேர்வு முறையில் கோளாறுகள் இருந்தால், தேர்வர்களை கண்டம் விட்டு கண்டம் சென்று தேர்வு எழுத வைத்தால் கூட முறைகேடுகள் நடப்பதை தடுக்க முடியாது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அணுகுமுறை முறைகேடுகள் இல்லாமல் போட்டித் தேர்வுகளை நடத்தும் திறன் அதற்கு இல்லை என்பதையே காட்டுகிறது. லாயத்தை பூட்டாமல் திறந்து வைத்து விட்டு, குதிரைகளை கட்டி வைப்பது புத்திசாலித்தனமான செயல் அல்ல.

2018, 2019 ஆகிய ஆண்டுகளுக்கான நீட் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இராஜஸ்தான், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த அணுகுமுறையை தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டித்தன; சென்னை உயர் நீதிமன்றமும் இந்த முடிவை கடுமையாக விமர்சித்தது. நீட் தேர்வுக்கான மையங்கள் வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்த தமிழ்நாடு, விரிவுரையாளர் பணிக்கான போட்டித்தேர்வை மட்டும் வெளி மாவட்டங்களில் நடத்துவது எந்த வகையில் நியாயம்? சீர்திருத்தங்கள் சீரழிவுக்கு ஒருபோதும் வழிவகுத்துவிடக் கூடாது.

எனவே, விரிவுரையாளர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கும் அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும். ஆன்லைன் போட்டித் தேர்வு முறையை எந்த தவறும் செய்ய முடியாத அளவுக்கு வலுப்படுத்த வேண்டும். இவற்றை செய்வதற்கு போதிய அவகாசம் இல்லை என்றால், விரிவுரையாளர் பணிக்கான போட்டித்தேர்வை சில வாரங்கள் ஒத்திவைத்து விட்டு, குறைகளை சரி செய்த பிறகு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “ பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மையங்கள் வெகு தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது சிரமமாக இருக்கிறது என்று தேர்வர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறவிருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு அருகிலேயே தேர்வு மையம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தேர்வு மையங்களை ஏற்பாடு செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் விரிவுரையாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதிய அரசாணை ஒன்றும் வெளியிடப்படும்” என்று கூறினார்.

மேலும் அவர்,” கடந்த ஆண்டை விட இந்தாண்டு பொறியியல் படிப்புகளில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இருப்பினும் , இன்னும் காலியிடங்கள் இருக்கின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் இலவவ கல்வி உள்ளிட்ட திட்டங்களால் பொறியியல் படிப்புகளில் அதிக மாணவர்கள் சேர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share