பொங்கல் பரிசு தொகுப்புடன், கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போன்று இந்த ஆண்டும் ரொக்க பணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு இன்று பரிசுத் தொகுப்பை அறிவித்தது. அதில், பொங்கலுக்குத் தேவையான பொருட்களுடன், 2,15,48,060 குடும்பங்களுக்கு 1,088 கோடி ரூபாயில், மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதில் கரும்பு இடம்பெறாத நிலையில், பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதுபோன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போன்று பணமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும்,முழு கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை. தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு,தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை,
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று (நவம்பர் 17) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தொகுப்பில் முழு கரும்பு இடம்பெற முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார் என்று தெரிவித்தார்.
அப்போது அவரிடம் இந்த ஆண்டு கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் வலியுறுத்துகின்றனர். எனவே கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.2500 வழங்கப்பட்டது போல இந்த ஆண்டு ரொக்கம் வழங்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் கொரோனா நிவாரண நிதியாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் அதிமுக அரசு 1000 ரூபாய்தான் வழங்கியது. பின்னர் முதல்வராகப் பொறுப்பேற்றதும், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கினார். கடந்த ஆட்சியில் எதற்காக 2,500 ரூபாய் கொடுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நியாய விலை கடைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் வழங்குவார்கள். இந்த தொகுப்பு மக்களுக்குச் சரியாகச் சென்றடைகிறதா என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் குழு அமைக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு முதன்முறையாக நெய்யும் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
[20 பொருட்களுடன் பொங்கல் பரிசு!](https://minnambalam.com/k/2021/11/17/23?e)
**-பிரியா**
�,”