சிஏஏ தொடர்பான போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் உத்தரவை உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
சிஏஏவுக்கு எதிராக திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூரில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாக இந்து முன்னேற்றக் கழகத் தலைவரும், வழக்கறிஞருமான கோபிநாத் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், சிஏஏ போராட்டங்களால் மாணவர்கள் அவதியடைவதாகக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, “சாலைகளில் அனுமதியின்றி சிஏஏ தொடர்பாக போராட்டம் நடத்துபவர்கள் அனைவரையும் அப்புறப்படுத்தி கைது செய்ய வேண்டும்” என்று டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் முன்பு இன்று (மார்ச் 6) போராட்டக்காரர்கள் தரப்பில் வைகை, மோகன், என்.ஜி.ஆர்.பிரசாத், முபீன், ராஜா முகமது உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் ஆஜராகி, கைது செய்ய வேண்டும் என்கிற உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும், “மனுதாரர் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியாக உள்ளது. அவர் மீது ஏராளமான குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. ஆகவே, இந்த வழக்கை தீர விசாரிக்க வேண்டும். எங்களது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்” என்று நீதிபதிகளிடம் வலியுறுத்தினர்.இதனை ஏற்ற நீதிபதிகள், உத்தரவை வரும் 11ஆம் தேதி வரை நிறுத்திவைத்து உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களையும் முன்வைக்கலாம் எனவும் அறிவுறுத்தினர்.
**எழில்**�,