’நானும் விவசாயி’: முதல்வருக்கு கே.என்.நேரு பதிலடி!

Published On:

| By Balaji

”ஒரு ஊழல்வாதி, தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்வதைத் தமிழக விவசாயிகள் யாரும் விரும்பவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்.எல்.ஏ கே.என்.நேரு, பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையில் நேற்று முன்தினம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ”தேர்தல் நெருங்கி வருவதால் புதிய அவதாரங்களை எடுத்து வருகிறார் முதல்வர் பழனிசாமி. அதில் ஒன்றுதான் விவசாயி அவதாரம். நானும் விவசாயிதான் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். விவசாயி எனச் சொல்லிக்கொண்டால் அவர்களது நகத்தில் மண் இருக்கும். ஆனால் முதல்வர் எடப்பாடியின் கரத்தில் ஊழலின் கறைகள் தான் இருக்கிறது” என்று விமர்சித்திருந்தார்.

இதற்குச் சேலத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ” விவசாயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஸ்டாலின் அப்படித்தான் பேசுவார். விவசாயத்தைப் பற்றித் தெரியாத ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருப்பது தமிழ்நாட்டில்தான். ஈரோட்டில் கான்கிரீட் சாலை அமைத்து, அழுக்குப் படக்கூடாது என்பதற்காகக் காலில் சாக்ஸ் மாட்டிக்கொண்டு கரும்புத் தோட்டத்தை அவர் பார்வையிடுகிறார்” என்று கூறி அதுபற்றிய புகைப்படத்தைக் காட்டினார்.

இந்நிலையில் முதல்வரின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள கே.என்.நேரு, ”இது மண்வெட்டி பிடித்த கை, ஏரோட்டிய கை, சேற்றில் மிதித்த கால்’ என்று ‘நானும் ரவுடி தான்’ பாணியில் சேலத்தில் பேசி இருக்கிறார் பழனிசாமி. நானும் விவசாயிதான் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் அவரது ஆட்சி காலத்தில் விவசாயிகள் அடைந்த நன்மை என்ன? அவர் விவசாயிகளுக்காக என்ன செய்தார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், “கடந்த சில ஆண்டுகளில் வேளாண்மை சாராத நடவடிக்கைகளால் வேளாண்மையை எதிர்விளைவாகப் பாதித்து மாநில உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகிவிட்டது” என்று எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த சட்டத்தில் இருக்கிறது. இது உண்மையானால் இப்போது நடைமுறையில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் பாதிப்பு ஏற்பட்டதால்தான் இந்த சட்டமே கொண்டு வரப்படுகிறதென்றால் அந்த ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுவதை அனுமதிப்பது இந்த சட்டத்திற்கே புறம்பானது ஆகாதா? என்ற ஸ்டாலினின் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லி இருக்க வேண்டும்.

ஏற்கனவே இருக்கும் கிணறுகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றால், வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்கிற வார்த்தையே அர்த்தமற்றதாகிவிடும். இதற்கு முதல்வர் பதில் சொல்லி இருக்க வேண்டும்.

காவிரி படுகை பாதுகாப்புக் கூட்டியக்கம் சார்பில் மார்ச் 4ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களில் அமலில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை வெளியேற்றாமல் வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது பயன் தராது என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதற்கு முதல்வர் பதில் சொல்லி இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல முதல்வர் இதனை அறிவித்த போது வரவேற்ற அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும்; தற்போது சட்டம் கொண்டு வந்த பிறகு எதிர்க்கிறார்கள் என்றால், இதற்கெல்லாம் எந்த பதிலும் சொல்லாமல், ‘நானும் விவசாயி’ என்று தேய்ந்த ரெக்கார்டு போல பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இவர் ஏர் பிடித்ததால், மண்வெட்டி பிடித்ததால் இந்த நாட்டு விவசாயிகள் அடைந்த லாபம் என்ன? ‘மண்புழுவாக’ ஊர்ந்ததால் அடித்துக் குவிக்கும் கோடிகளால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு என்ன லாபம்?” என்று பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

”உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் வரை சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்கள் ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி வெயிலிலும் மழையிலும் உழைக்கும் விவசாயிகளுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம். எட்டு வழிச் சாலைக்காக விவசாயிகளின் விளை நிலங்களைப் பறித்து – சேலத்தில் விவசாயிகள் மீது தடியடி நடத்தி- இரவோடு இரவாகப் பிடித்து சிறையில் தள்ளியது யார்? ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதித்து – காவிரி டெல்டாவை பாலை வனமாக்க மத்திய பா.ஜ.க. அரசுடன் துணை நின்று – இப்போது விவசாயிகளை ஏமாற்ற ‘பல் இல்லாத ஒரு சட்டத்தை’ கொண்டு வந்து நாடகம் போடுவது யார்? தங்கள் மண்ணை காப்பாற்றப் போராடிய விவசாயிகள் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது- தடியடி நடத்தியது எல்லாம் யார்? விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்களை அமைத்து- விவசாயிகளின் வேளாண் நிலத்தைச் சிதைத்து சின்னா பின்னப்படுத்தியது யார்?

தன்னை இவர் விவசாயி என்று சொல்லிக் கொள்வதன் மூலமாக உண்மையான விவசாயிகள் தலைகவிழ்கிறார்கள். ஒரு ஊழல்வாதி, தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்வதைத் தமிழ்நாட்டு விவசாயிகள் விரும்பவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share