திமுக-அதிமுக-பாஜக: தேர் விபத்தில் இணைந்த கட்சிகள்!

Published On:

| By admin

தஞ்சை மாவட்டம் களிமேடு என்ற பகுதியில் தேர்த்திருவிழா மின்சாரம் பாய்ந்து பதினோரு பேர் பலியான கொடூரம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்த விபத்தில் பலியான மூன்று பேரின் குடும்பங்களுக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் நேரடியாக சென்று நேற்று ஏப்ரல் 27ஆம் தேதி ஆறுதல் கூறி நிதி உதவியும் அளித்தார்.

சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 28)இந்த விவகாரம் குறித்து பேசிய தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ்,

“நமது தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது போராட்டங்களில் உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் நிதி உதவி அளிக்கவும் குடிசை வீடாக இருந்தாலும் நேரில் சென்றவர். நானும் உடன் சென்றவன். இப்போது முதல்வராக இருக்கும் போதும் அதே இயல்போடு தான் இருக்கிறார். எந்நிலையில் இருந்தாலும் தன்னிலை மாறாத ஒரு மனிதனை நாம் முதல்வராக பெற்றிருக்கிறோம்.

களிமேடு சம்பவம் பற்றி தகவல் வந்தவுடனேயே என்னிடம் நீ தஞ்சாவூர் செல், நானே சட்டமன்றத்தில் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்துவிட்டு நிவாரண உதவியும் அறிவித்துவிட்டு பின்னாடியே வருகிறேன் என்று அனுப்பி வைத்தார். நானும் மக்கள் பிரதிநிதிகளும் அங்கே சென்றோம்.
நான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக எத்தனையோ பள்ளிக்கூட நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு மாலைகளும் மெடல்களும் அணிவித்து இருக்கிறேன். ஆனால் தஞ்சாவூரில் நான் முதலில் மலர்மாலை வைத்தது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு” என்று பேசும்போதே உடைந்து கண்கலங்கினார் அமைச்சர் மகேஷ்.
“நான் முதல்வரிடம் நீங்கள் ஜிஹெச் வந்தால் போதும், 11 உடல்களுக்கும் இங்கேயே மாலை வைத்துவிடலாம் என்று சொன்னேன். ஆனால் முதல்வரோ, ‘இல்லை இல்லை… இறப்பை சந்தித்துள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நானே சென்று நேரடியாக ஆறுதல் கூறினால் தான் என்னை நானே கொஞ்சம் தேற்றிக் கொள்ளமுடியும்’ என்று சொன்னார்.
அதன்படியே அந்த கிராமத்தில் இருக்கும் பதினொரு வீடுகளுக்கும் நேரில் சென்று ஆறுதல் சொல்லி அரசாங்கம் அளித்த ஐந்து லட்ச ரூபாய் பணம் கட்சி அளித்த இரண்டு லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை அளித்தார். சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் அரசு அறிவித்த நிவாரணம் கட்சி அறிவித்த நிவாரணம் ஆகியவற்றை வழங்கினார் முதலமைச்சர்”என்று குறிப்பிட்ட அமைச்சர் மகேஷ் தேர் விபத்து தொடர்பாக ஒவ்வொரு அமைச்சரும் செய்த உடனடி உதவிகளையும் பட்டியலிட்டு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து, “இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று முதல்வர் வேண்டுகோள் வைத்துள்ளார். ஆம்… அந்த ஊராட்சி மன்றத்தின் தலைவர் அதிமுகவை சேர்ந்தவர். ஒன்றியக்குழு கவுன்சிலர் பிஜேபியை சேர்ந்தவர். மாவட்ட கவுன்சிலர் திமுகவை சேர்ந்தவர். அங்கே இவர்கள் மூவரும் சேர்ந்து பணியாற்றினார்கள். நமது ஆட்சி என்று முதல்வர் சொல்லக்கூடிய இந்த விஷயம் ஃபீல்டில் பிரதிபலிக்கிறது. இந்த அவையிலும் பிரதிபலிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் அமைச்சர் மகேஷ்.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share