பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு, அடுத்த சில மணி நேரங்களில் ராஜ்யசபா வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று விலகிய ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 11) அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். தன்னை பாஜகவில் அடிப்படை உறுப்பினராகவும் இணைத்துக்கொண்டார். சிந்தியாவுக்கு பூங்கொத்து கொடுத்து நட்டா பாஜகவுக்கு வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, “என்னை பாஜக குடும்பத்திற்கு அழைத்து, அதில் எனக்கும் ஒரு இடம் கொடுத்தற்காக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனது வாழ்க்கையில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று என்னுடைய தந்தையை இழந்தது. மற்றொன்று, என்னுடைய வாழ்க்கையில் நேற்று நான் ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது” என்று தெரிவித்தார்.
தற்போது காங்கிரஸ் கட்சி முன்பு இருந்தது போல இல்லை என்று குறிப்பிட்ட சிந்தியா, “காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு மக்கள் சேவை செய்ய முடியாது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்” என்றும் கூறினார்.
ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்த அடுத்த சில மணி நேரங்களில், அவருக்கு ராஜ்யசபா வாய்ப்பு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய பிரதேசத்திலிருந்து பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிராதித்ய சிந்தியா, ஹர்ஷ் சிங் சவுகான் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் பாஜக தரப்பில்.
**எழில்**�,