சட்டப்பேரவையைக் கலகலப்பாக்கிய ஜி.கே.மணி, அப்பாவு

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் விளையாட்டுத் துறைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம், வடசென்னையில் குத்து சண்டை மைதானம் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.

இந்த அறிவிப்புகளை சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரவேற்றுப் பேசினார்.

அப்போது பாமக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜிகே மணி பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அவர் பேசுகையில், “நாட்டின் சொத்தாகப் போற்றப்படுகிற இளைஞர்களில் 40 சதவிகிதம் பேர் மாணவர்கள். இன்றைய நவீன உலகத்தில், கைப்பேசி கணினிக்குள் நுழைந்து தங்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் நாம் மாற வேண்டும் என்றால் விளையாட்டுகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

எனவே இந்த அவையில் நான் , விளையாட்டுகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு விளையாட்டுத் துறை அமைச்சரிடம் கேள்வி நேரத்தில் பதில் சொல்லுங்கள் என்று அவரைக் கேட்டுக் கொண்டு கையை உயர்த்திக் கொண்டே இருந்தேன்.

ஆனால் பேரவைத் தலைவர் அவர்கள் நேரம் வழங்கவில்லை. எனினும் நாங்கள் மனதில் நினைத்ததை இன்று முதல்வர் அறிவித்துள்ளார். நாட்டு மக்களின் நலன் கருதி முதல்வர் அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

கேட்டுக் கேட்டு பார்த்தேன் கிடைக்கவில்லை . இன்று கேட்காமல் அறிவித்துள்ளார். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது. விளையாட்டுகள் குறைந்து வருகிற நேரத்தில் இந்த அறிவிப்பு மிகவும் மகத்தானது” என்றார்.

அவர் பேசியதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, நேரம் தரவில்லை என்று வருத்தப்பட்டுள்ளீர்கள். ஆனால் இப்படி ஒரு பதில் வருகிறது என்பதால் தான் உங்களுக்கு அந்த கேள்வியைத் தரவில்லை” என்று கூறியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

**-பிரியா**

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts