முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள், உதவியாளர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்களில் இன்று (அக்டோபர் 18) காலை தொடங்கி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் இருக்கும் விஜயபாஸ்கரின் வீடு, அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 43 இடங்களில் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வருமானத்துக்கும் மேல் அதிக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் பீட்டர் அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு அதன் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக விஜிலென்ஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
சென்னையில் நுங்கம்பாக்கம், மந்தவெளி, பெசண்ட் நகர் பகுதிகளில் சோதனை நடைபெறும் நிலையில் பல இடங்களில் சொத்து ஆவணங்களும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சென்னை கீழ்ப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணையும் நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
திமுக ஆட்சி ஆரம்பித்ததும் முதலில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் கரூர் விஜயபாஸ்கரைக் குறிவைத்து ரெய்டு நடந்தது. அடுத்ததாக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீது ரெய்டு நடந்தது. அதன் பின்னர் கடைசியாக முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில் இப்போது நான்காவது முன்னாள் அமைச்சராக ரெய்டு வளையத்துக்குள் வந்திருக்கிறார் விஜயபாஸ்கர்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு சுமார் ஒரு மாத காலம் இடைவெளி விடப்பட்டிருந்த நிலையில், அடுத்து திமுக ஆட்சிதான் வரும் என்று அப்போதே அதிமுக அமைச்சர்கள் மத்தியில் பேச்சு நிலவியது. அந்த நிலையில் திமுக ஆட்சி வரும் என்று எதிர்பார்த்தவர்களில் விஜயபாஸ்கரும் ஒருவர். அவர் தேர்தல் முடிவுகள் வரும் முன்பே, திமுக தலைவரான மு.க.ஸ்டாலினிடம் தூது அனுப்பினார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இதுபற்றி 2021 ஏப்ரல் 13 ஆம் தேதி [ஆட்சி மாறினால்…: ஸ்டாலினுக்கு தூதுவிடும் அமைச்சர்?]( https://minnambalam.com/politics/2021/04/13/40/govt-change-admk-minister-message-to-stalin) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியில், “விஜயபாஸ்கரின் உதவியாளர்களில் ஒருவர் திமுக தலைவர் ஸ்டாலினை சுற்றி இருக்கும் ஒரு முக்கிய பிரமுரிடம் பேசியுள்ளார். ‘உங்க தலைவர் அதிமுக ஆட்சியில் மற்ற அமைச்சர்களை விட எங்க அமைச்சர் மேல தான் அதிக கோபமாக இருக்கிறார். புதுக்கோட்டைதேர்தல் பிரச்சாரத்திலேயே அவருடைய பேச்சில் அது தெரிந்தது. உங்க தலைவர் கிட்ட கொஞ்சம் சொல்லுங்க. ஒருவேளை ஆட்சி மாறினால் கூட எங்க அமைச்சர் மீது கோபம் காட்ட வேண்டாம் என்று சொல்லுங்கள்’ என்ற ரீதியில் அவர் பேச…. ஸ்டாலினுக்கு நெருக்கமான அந்த திமுக பிரமுகர் எந்த உறுதியான பதிலும் சொல்லாமல் எந்த உத்தரவாதமும் சொல்லாமல் பிடிகொடுக்காமல் பதிலளித்திருக்கிறார். ஆட்சி மாற்றத்துக்கான உணர்வு அதிமுக முக்கியப் பிரமுகர்களுக்கும் வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது” என்று குறிப்பிட்டிருந்தோம்.
விஜயபாஸ்கர் எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சி அமைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை சட்டமன்ற வளாகத்திலேயே சந்தித்து, ‘நான் உங்களப் பத்தி பேசினதை எல்லாம் மனசுல வச்சுக்காதீங்க. அப்ப இருந்த அரசியல் சூழ்நிலை அப்படி’ என்று விஜயபாஸ்கர் விளக்கம் கொடுத்ததாகவும் சட்டமன்ற உறுப்பினர்களிடையே பேசப்பட்டது.
இந்த நிலையில்தான் கொரோனா தடுப்பு நடவடிக்கைக் குழுவில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரான விஜயபாஸ்கரையும் இடம்பெறச் செய்தார் முதல்வர் ஸ்டாலின். இதை புதுக்கோட்டை திமுகவினர் ரசிக்கவே இல்லை.
இந்த நிலையில்தான் இப்போது ரெய்டு நடந்து வருவது பற்றி புதுக்கோட்டை மாவட்ட அதிமுக, திமுக என இரு தரப்பிலும் குறிப்பிட்ட ஒரு விஷயம் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
“விஜயபாஸ்கர் திமுக அரசில் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் என்று சில மாதங்கள் முன்பே தகவல்கள் வந்தது. ஏற்கனவே ரெய்டு நடத்தப்பட்ட அமைச்சர்கள் மீது கைது நடவடிக்கை உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது ரெய்டுக்கு உள்ளாகியுள்ள விஜயபாஸ்கர் அதிகார வட்டாரத்திலும் அதிமுக தாண்டிய கட்சி வட்டாரத்திலும் பெரிய அளவிலான லாபி செய்யக் கூடியவர். எனவே இந்த ரெய்டு அவரை சிறையில் அடைப்பதற்கா அல்லது வெறும் கண் துடைப்பதற்கா என்ற கேள்விகள் எழுகின்றன” என்கிறார்கள்.
**-வேந்தன்**
�,