|10.5% இட ஒதுக்கீடு ரத்து- திமுகதான் காரணம்: ஈபிஎஸ்

politics

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக அரசுதான் காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் திமுக அரசுதான் காரணம். இந்த விவகாரம் குறித்து அதிமுக சரியாக சட்டம் இயற்றி, தாக்கல்செய்து இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வந்தோம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக, முதல்வர் ஸ்டாலின், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடவில்லை. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியிருக்க வேண்டும். அம்பாசங்கர் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அந்த அறிக்கை தாக்கல் செய்திருந்தால், அனைத்து விவரங்களும் அதில் உள்ளது.

உயர் நீதிமன்றக் கிளையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதியே சரியான தரவுகள் கொடுக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால், அரசாங்கத்தின் மீதுதானே தவறு. எது எதற்கோ மூத்த வழக்கறிஞரை வைக்கிறார். இது ஒரு மிகப்பெரிய பிரச்சினை. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், அதிமுக அரசு கொண்டு வந்த அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு இதை நிறைவேற்றக் கூடாது என்ற அடிப்படையில், மூத்த வழக்கறிஞர்களை வைத்து நீதிமன்றத்தில் வாதாடாத காரணத்தால்தான், இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அதிமுக இந்த விவகாரத்தில் சரியான முறையில் அதிகாரிகளை நியமித்துதான் இந்த இடஒதுக்கீட்டை அறிவித்தோம்.

இதுதொடர்பான முழு தரவுகளை மதுரை கிளையில் தாக்கல் செய்யவில்லை. மேல்முறையீடு செய்யும்போது அதைவைத்துதான் அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். வழக்கை விசாரித்த நீதிபதியே சரியான தரவுகளை தாக்கல் செய்யவில்லை என்று கூறிவிட்டார்.
இப்போது சட்ட வல்லுநர்களை வைத்து ஆலோசிப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார்.

அப்போதே மூத்த வழக்கறிஞர்களை வைத்திருந்தால், இந்தப் பிரச்சினைக்கே இடமில்லாமல் போயிருக்கும். தரவுகளை சரியாக தாக்கல் செய்திருந்தால், நீதி கிடைத்திருக்கும். அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதற்காக திட்டமிட்டே இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
முன்னதாக, அதிமுக ஆட்சியில் தேர்தலுக்காக அவசர கோலத்தில் சரியான அடிப்படை தரவுகள் இன்றி இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதால்தான் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *