�எட்டு வழி சாலை: எடப்பாடி வழியில் ஸ்டாலின்? மீண்டும் முளைக்கும் போராட்டங்கள்!

Published On:

| By admin

சென்னை சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராகவும் போராட்டங்களை துவங்கியிருக்கிறார்கள் எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்கத்தினர்.

“போடாதே போடாதே எட்டு வழி சாலை போடாதே… விடமாட்டோம் விடமாட்டோம் எங்கள் நிலத்தை விட மாட்டோம்” ஆகிய முழக்கங்கள் மீண்டும் விவசாயிகளிடமிருந்து எழ ஆரம்பித்துவிட்டன.

கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் முதல் சென்னை வரை 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு பசுமை விரைவு சாலை எனப்படும் எட்டு வழி சாலை அமைப்பதற்கான முயற்சிகளில் மாநில மத்திய அரசுகள் இறங்கின.
இந்த சாலை அமைப்பதால் சேலத்தில் இருந்து சென்னை வரையிலான பல்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்கள், மலைப்பகுதிகள் அழிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். விவசாயிகளும் தங்கள் விளை நிலங்களை விட்டுக் கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகளின் போராட்டத்துக்கு திமுக ஆதரவளித்தது.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் எட்டு வழி சாலை திட்டம் நிறைவேற்றப்படாது என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் நேற்று ஏப்ரல் 12ஆம் தேதி சட்டமன்றத்தில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமாரின் கேள்விக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, ‘சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் திட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பேசியிருக்கிறார்.

“சென்னை சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதனடிப்படையில் திட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மற்றும் மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும் என்ற அப்போதைய நிலைப்பாடே எங்களின் இப்போதைய நிலைப்பாடு” என்று கூறியிருக்கிறார் அமைச்சர் வேலு.

இதையடுத்து இன்று (ஏப்ரல் 13) பகல் 12 மணிக்கு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோம்பூர் கிராமம் தாத கவுண்டர் தோட்டத்தில் எட்டு வழிச்சாலை பாதிப்பு விவசாயிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலுவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கும் எட்டு வழி சாலையை எந்த வடிவத்தில் கொண்டு வந்தாலும் ஒருபோதும் நிலம் தரமாட்டோம் எனவும் விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினார்கள்.

“எட்டு வழி சாலை திட்டம் நிறைவேற்றப்படாது என்று தேர்தல் அறிக்கையில் கூறிய திமுக, இப்போது அதற்கு முரணாக பேசுகிறது. இப்பொழுது புதிதாக மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று கூறுவது சந்தேகத்தையும், குழப்பத்தையுமே ஏற்படுத்துகிறது. சேலம் – சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் போதே 90 சதவீத விவசாயிகள் எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலம் கொடுப்பதற்கு சம்மதித்து விட்டார்கள் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொய் சொன்னது போல், தி.மு.க.அரசின் மக்களின் கருத்து கேட்பு இருக்குமோ என்ற அச்சம் எங்கள் முன் நிற்கின்றது.

2018 இல் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 5 மாவட்டங்களில் விவசாயிகள் இந்த அழிவு திட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றார்கள். அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி 8 வழிச்சாலைக்கு எதிராக போராடியது ஆனால் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் அதே திமுக இதுவரையில் எந்த ஒரு தெளிவான முடிவையும் எடுக்கவில்லை. அன்று வேண்டாம் என்று போராடிய மக்கள் இன்று எட்டு வழி சாலை வேண்டும் என்ற சொல்ல போகிறார்களா? , எட்டு வழி சாலையை விவசாய நிலங்கள் மீதும் காடுகளின் இடையேயும் போடப்படும் என்ற நிலை மாறி இன்று ஆகாயத்திலா எட்டு வழி சாலையை போட போகிறீர்கள்?

உடனடியாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டம் தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்ற அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்” என்று இந்த கூட்டத்தில் எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் உள்ளிட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

மேலும் பல்வேறு கிராமங்களில் விவசாயிகளின் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share