ஆளுநர் உரை ஏமாற்றமளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட அதிமுகவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ”ஆளுநரின் உரையில் வழக்கமாக அரசின் முன்னோடி திட்டங்கள் இடம்பெறும். ஆனால் இன்றைய உரையில், அப்படிப்பட்ட முக்கியமான எந்த திட்டங்களும் இடம் பெறாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
சட்டமன்றத் தேர்தலின் போது 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்கள். ஆட்சி அமைந்தவுடன் அவை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்கள். இந்த வாக்குறுதிகளில் முக்கியமானவை கூட ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் தெரிவித்தார். தற்போது நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து அக்குழுவின் அறிக்கையின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியது, திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதே. ஆனால் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தேர்தல் வரும் போது ஒரு பேச்சு, தேர்தலுக்குப் பின் ஒரு பேச்சாக இருக்கிறது. தேர்தல் நேரத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை” என்றார்.
மேலும் அவர், “அதிமுக அரசு கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்து அரசாணை வெளியிட்டது. அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி அமைத்து 44 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் அவர்கள் பயிர் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கவில்லை. தற்போது பருவமழை துவங்கிவிட்டது. டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பயிர் செய்யத் தொடங்கிய நிலையில் புதிய பயிர்க் கடன் வழங்க வேண்டும். அதுவும் முழுமையாகத் தெளிவுபடுத்தவில்லை.
மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தார்கள். அதுபற்றியும் ஆளுநரின் உரையில் இடம் பெறவில்லை. 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியும் இடம் பெறவில்லை.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சுய நிதிக்குழுக்கள் வாங்கிய கடன், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு, முதியோர் உதவித் தொகை ரூ.1500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு, கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதிகள் ஆளுநரின் உரையில் இடம்பெறவில்லை. இது ஏமாற்றமளிக்கிறது.
அதுபோன்று கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டம் குறித்து ஒரு வரி கூட ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. கொரோனாவை தடுப்பதற்கு இந்த அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா பரவலைத் தடுக்க இந்த அரசு தவறிவிட்டது. கொரோனா உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. அதை இந்த அரசு மறைக்கிறது. கொரோனாவால் தான் உயிரிழந்தார்கள் என்று சான்று அளிக்க மறுக்கிறார்கள். இதனால் மத்திய மாநில அரசுகளின் உதவித் தொகையைப் பாதிக்கப்பட்டவர்களால் பெற முடிவதில்லை.
சட்டப்பேரவைக்கு வரும் போது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என சபாநாயகர் உத்தரவிட்டார். எனவே, சேலம் மாநகராட்சி மூலமாக, தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அவருக்கு பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. பின்னர் அவர், என்னை தொடர்புகொண்டு, “நான் நலமாக இருக்கிறேன். ஆனால் பாசிட்டிவ் என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள்” என்றார்.
அவரை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளச் சொன்னேன். உடனே அவர் காவேரி மருத்துவமனையில் கொரோனா டெஸ்ட் எடுத்தார். ஆர்டிபிசிஆர், ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை. ஆர்டிபிசிஆர் சோதனையிலேயே குளறுபடி நடக்கிறது ” என்று கூறினார்.
**-பிரியா**
�,