தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜனவரி 18) மாலை டெல்லி சென்ற நிலையில், நேற்று இரவு 7.30 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்துள்ளது.
அரசு முறை பயணமாக எடப்பாடி டெல்லி சென்றிருந்தாலும், அரசியல் ரீதியாக முக்கியத்துவமான பயணமாகவும் இது பார்க்கப்படுகிறது.
முதல்வரோடு அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம், முதல்வரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் ஆகியோர் சென்றிருக்கிறார்கள்.
தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரவு 7.30 மணிக்கு அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த விவரங்கள் இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டன என்கிறார்கள். மேலும், சசிகலாவை அதிமுகவுக்கு மீண்டும் கொண்டுவருவது தொடர்பாக தனது அதிருப்தியையும் அமித் ஷாவிடம் எடப்பாடி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
வரும் ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படும் நிலையில், அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவான சில குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. அவற்றை அவ்வப்போது கண்டித்து வரும் முதல்வர் எடப்பாடி… சசிகலாவுக்கு ஆதரவான எந்த அரசியல் நடவடிக்கையையும் பாஜக மேற்கொள்ள வேண்டாம் என்று அமித் ஷாவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்தபடியே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் காணொலி முறையில் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை விரைவாக ஒதுக்கிட வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜி.எஸ்.டி. இழப்பீடு உள்பட பல்வேறு வகைகளில் மத்திய அரசு தரவேண்டிய ரூ.19,591.63 கோடி நிலுவைத் தொகையை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளார் ஓபிஎஸ்.
இன்று (ஜனவரி 19) முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார்.
**-வேந்தன்**
�,