திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இன்று (மார்ச் 1 )ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கையெழுத்து ஆகலாம் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நேற்று மனிதநேய மக்கள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் திமுகவின் தொகுதிப் பங்கீட்டு குழு அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, உயர் நிலைக் குழு உறுப்பினர் சபியுல்லா கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா செய்தியாளரிடம் பேசுகையில்….
கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிட்ட அதே எண்ணிக்கையை இந்த முறையும் கேட்டிருக்கிறோம். திமுக தலைவர் ஸ்டாலின் நாளை இதுபற்றி அறிவிப்பார்”என்று கூறினார். மேலும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து நேற்று பேசப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மனிதநேய மக்கள் கட்சி வட்டாரத்தில் நாம் இது குறித்து பேசும்போது…
“ஏற்கனவே எங்கள் கட்சியோடு பேசிய எ.வ. வேலு தொகுதிப் பங்கீட்டு குழுவில் இருந்தார். அதன் தொடர்ச்சியான பேச்சு வார்த்தையாகவே இது அமைந்தது. நாங்கள் போன முறை 5 தொகுதிகள் பெற்று அதில் ஒரு தொகுதியை திருப்பி அளித்து விட்டோம். இந்த அடிப்படையில் இப்போது ஐந்து அல்லது 4 தொகுதிகளை கேட்டோம். ஆனால் திமுக சார்பில் 2 தொகுதிகள் தான் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளுங்கள். மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் குறைவான இடங்களே ஒதுக்கப்படுகின்றன.
திமுக குறிப்பிட்ட எண்ணிக்கையில் நிற்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். அதற்குப் பரிசாக அமைய இருக்கும் திமுக ஆட்சியில் சிறுபான்மை நல ஆணைய தலைவர் பதவியும், வக்ஃப் வாரிய தலைவர் பதவியும் உங்களுக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்கள். மேலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லித் தான் வற்புறுத்துகிறார்கள். இதுபற்றி இன்றும் கூட நிர்வாகிகளுடன் ஜவாஹிருல்லா ஆலோசனை செய்துள்ளார். இன்று ஸ்டாலின் உடனான ஆலோசனையின் போது ஸ்டாலின் மனது வைத்தால் ஒரு தொகுதி கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. சின்னம் அனேகமாக உதயசூரியனாகத்தான் இருக்கும்”என்கிறார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை பொறுத்தவரை கடந்த முறை போட்டியிட்ட 5 தொகுதிகளை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால் எடுத்த எடுப்பிலேயே, “உங்களுக்கு ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கொடுக்கப்பட்டுவிட்டது. அதுவே ஆறு எம்.எல்.ஏ.க்களுக்கு சமம். அதனால், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுங்கள்” எ.வ. வேலு கூறியிருக்கிறார். அந்த முடிவையும் இன்று ஸ்டாலின் அறிவிப்பார் என்று திமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போதே சில விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. எனவே மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுடனும் இன்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு விரைவில் உடன்பாடு எட்டப்பட வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
**-ஆரா**
�,”