போலீஸ் கஸ்டடியில் திமுக எம்பி ரமேஷ் கொடுத்த வாக்குமூலம்!

Published On:

| By Balaji

முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில் சரண்டராகியிருக்கும் திமுக எம்பி ரமேஷ், சிபிசிஐடி கஸ்டடியில் தனது வாக்குமூலத்தை கொடுத்திருக்கிறார். .

கடலூர் தொகுதி திமுக எம்.பி.யான ரமேஷ் குடும்பத்திற்கு சொந்தமான முந்திரி கம்பெனியில், வேலை செய்தவர் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தராஜ். அவர் கம்பெனியில் முந்திரிகளைப் பல லட்சத்துக்குத் திருடிவிட்டார் எனச் சந்தேகப்பட்டு கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி, கோவிந்தராஜை விசாரணை செய்த எம்பி,யும் அவரது ஆதரவாளர்களும் கடுமையாகத் தாக்கினர். அதன்பின் அவரை இழுத்துப் போய் காடம்புலியூர் காவல் நிலையத்தில் முந்திரி திருடிவிட்டதாகப் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்து சிறைக்கு போடச் சொல்லியுள்ளார்கள்.

பணியிலிருந்த போலீஸார், கோவிந்தராஜ் ரத்தக்காயத்துடன் வந்திருப்பதை பார்த்து எதுவாகயிருந்தாலும் அவரை அழைத்துப்போய் மருத்துவமனையில் சிகிச்சைக் கொடுத்து, காலையில் அழைத்து வாருங்கள் என்று அனுப்பி வைத்துவிட்டார்கள்.

காவல் நிலையத்திலிருந்து கோவிந்தராஜை மீண்டும் முந்திரி கம்பெனிக்கு அழைத்துப்போய் அடித்துள்ளார்கள், அதன் பிறகு விஷமும் மதுவும் கோவிந்தராஜ் உடலுக்குள் சென்றுள்ளது, அந்த வழக்கு காடம்புலியூர் காவல் நிலையத்தில் செப்டம்பர் 20ஆம் தேதி, சந்தேக மரணம் என்று வழக்கு பதிவுசெய்யப்பட்டு, சிபிசிஐடி க்கு, மாற்றப்பட்டு அக்டோபர் 8ஆம் தேதி, மேனேஜர் நடராஜ் உட்பட ஐந்து பேரைக் கைதுசெய்தனர்.

இந்த நிலையில்தான் அக்டோபர் 11ஆம் தேதி, திமுக எம்பி ரமேஷ் பண்ருட்டி ஜே எம் 1 மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார்.

அக்டோபர் 13ஆம் தேதி, ஒரு நாளைக்கு மட்டும் சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்தார்கள். மதியம் 1.45 மணிக்கு அழைத்துச் சென்றவர்கள் மாலை 5.00 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இரவு கடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

சிபிசிஐடி கஸ்டடியில் என்னதான் நடந்தது என்று விசாரித்தோம்,

“விசாரணை அறையில் வீடியோ கேமரா தயாராக வைத்திருந்தோம். எம்பி ரமேஷ் வந்தார். சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்தவர் அதன் பின் மதிய உணவு சாப்பிட்டார். அதன் பிறகு ஏடிஎஸ்பி கோமதி, கடலூர் இன்ஸ்பெக்டர் தீபா, திருவண்ணாமலை இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, விழுப்புரம் இன்ஸ்பெக்டர் சுந்தராஜன் நான்குபேரும் சுற்றி உட்கார்ந்தார்கள்,. கோபப்படுத்தாமல் மென்மையாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வியைக் கேட்டுக் குறிப்பு எடுத்துக் கொண்டார்கள்.

முதலில் குடும்ப பின்னணியைப்பற்றிக் கேட்டு தெரிந்துகொண்டனர்,

”அப்பா சந்திரசேகரன் அரசு ஊழியர். அம்மா தாராபாய் ஹவுஸ் வொயிஃப். தம்பி யுவராஜ். எனக்கு 20 வயதிருக்கும்போது செல்வராஜ் செட்டியார் என்னை வளர்ப்பு பிள்ளையாக சட்ட ரீதியாக தத்தெடுத்துக்கொண்டார். 25 வயதில் திருமணம் நடந்தது, தம்பி யுவராஜ் என்னோட தொழில் பார்ட்னராக இருக்கிறார்” என்று கூறினார் ரமேஷ் எம்பி.

’ உங்களுக்கும் கோவிந்தராஜுக்கு என்ன மோட்டிவ்? நீங்க பெரிய தொழிலதிபர். அவர் ஒரு சாதாரண தொழிலாளி… உங்களுக்குள்ள என்ன சார் மோதல்” என்று கேட்டனர் போலீஸார்.

அதற்கு பதில் கூறிய ரமேஷ் எம்பி,

’நான் அவர் மீது நல்ல நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் எனக்குத் தெரியாமல் தினந்தோறும் கம்பெனியிலிருந்து சுமார் 80 லட்சம் மதிப்புள்ள முந்திரியைத் திருடி சொத்துகளும் வாங்கியுள்ளார். அவர்கிட்ட அதிக பணப் புழக்கம் இருந்தது. அதைக் கண்டுபிடித்து கோபமாகக் கேட்டேன். அவ்வளவுதான் நான் அடிக்கவில்லை. அசிங்கம் தாங்காமல் அவரே முந்திரிக்கு அடிக்கும் மருந்தை எடுத்துக் குடித்துவிட்டார்’ என்று அமைதியாக கூறியிருக்கிறார் ரமேஷ்.

அப்போது இன்ஸ்பெக்டர் கொஞ்சம் குரலை உருக்கமாக மாற்றி, ‘உண்மைய சொல்லுங்க சார்’ என்று அமைதியாகக் கேட்க, அப்போதுதான். ‘ சும்மா இரண்டு அடி அடித்தேன். அவ்வளவுதான் மற்றபடி நான் அடிக்கவில்லை’ என்று மெல்ல மெல்ல தான் அடித்ததை ஒப்புக்கொண்டார் எம்பி.

கோவிந்தராஜ் பிரேதப்பரிசோதனையில், ‘ 5 முதல் ஆறு பேர் தாக்கியிருக்கலாம். உடலில் ஆல்கஹால் 162% சதவீதம் கலந்துள்ளது, முந்திரி பயிர்களுக்கு பூச்சிகொல்லியாகப் பயன்படுத்தும் ஒபிசி ரக மருந்தும் உடலில் கலந்துள்ளது. (அந்த மருந்துக்கு ட்ரீட்மெண்ட் பி2ஏஎம் அல்லது அட்ரோபின் இன்ஞ்சக்‌ஷன் போடப்படும்) மரணத்துக்கு முக்கிய காரணம் தலையில் பலமாகத் தாக்கப்பட்டதுதான் என்று குறிப்பிட்டுள்ளது. இதைப் பற்றியும் எம்பி ரமேஷிடம் துருவி விசாரித்திருக்கிறார்கள்.

‘நீங்க சும்மா ரெண்டு அடி அடிச்சேனு சொல்றீங்க. ஆனா, போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல தலை பகுதியில் கூர்மையான இரும்பு கம்பியால் தாக்கியதால் ஆழமான காயம் ஏற்பட்டு மூளைப் பகுதி வரை பாதிக்கப்பட்டு மரணம் நேர்ந்திருக்கிறது என்று வந்திருக்கிறதே?’ எனக் கேட்டபோது. ‘அதைப் பத்தி எனக்குத் தெரியாது’ என்று பதில் அளித்துள்ளார் எம்பி.

’கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரும் உங்கள் மீதுதான் குற்றம் சாட்டுகிறார்களே?’என்ற கேள்விக்கும், ‘எனக்குத் தெரியாது’ என்று சொல்லியிருக்கிறார் எம்.பி. இப்படி சில கேள்விகளுக்கு எனக்கு தெரியாது என்றே தொடர்ந்து பதில் வந்திருக்கிறார் எம்பி ரமேஷ்.

அதன் பிறகு காபி கொடுத்துவிட்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மீண்டும் கடலூர் கிளைச் சிறையிலேயே அடைத்துள்ளனர்.

கடலூர் மத்திய சிறையில் அடைக்காமல் ஏன் கிளைச் சிறையிலேயே அடைத்துள்ளார்கள் என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம்..

“மத்திய சிறையில் அடைக்கப்பட்டால் எந்த பொருளையும் எளிதில் உள்ளே கொண்டு செல்ல முடியாது. யாரும் விருப்பப்பட்ட நேரத்தில் போய் பார்க்கவும் முடியாது. ஆனால் கிளைச் சிறையில் அவ்வளவு கட்டுப்பாடுகள் இல்லை. வீட்டுச் சாப்பாடு மற்ற விஷயங்கள் எல்லாமே உள்ளே தாராளமாய் போய் வரலாம்” என்று சிரித்தார்கள் போலீஸார்.

**-வணங்காமுடி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share