பேராசிரியர்: அப்பல்லோ வளாகத்தில் உலவும் வரலாற்றுச் சம்பவங்கள்!

Published On:

| By Balaji

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர். க. அன்பழகனின் உடல் நிலை பற்றி அறிய பல்வேறு கட்சித் தலைவர்களும், திமுக நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

இன்று (மார்ச் 1) காலை முதலே பல திமுக பிரமுகர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால், விஐபிகளை மட்டுமே அதுவும் பேராசிரியர் சிகிச்சை பெற்று வரும் அறைக்கு வெளியே இருந்து பார்ப்பதற்கு மட்டும் சம்மதித்தனர் மருத்துவர்கள். நோய்த்தொற்று ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன் ஜாக்கிரதைதான் இதற்குக் காரணம்.

இன்று முற்பகல் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா மருத்துவமனைக்கு வந்தார். அவர் பேராசிரியரைப் பார்த்துவிட்டு வெளியே நின்றுகொண்டிருந்த நேரத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வந்தார். பேராசிரியரின் உடல் நலம் பற்றி ராசாவிடம் வாசன் விசாரித்து அறிந்தார். பிறகு பேராசிரியரை பார்த்த வாசன் அவரது உடல் நலம் பற்றி மருத்துவர்களிடம் அறிந்தார். ஜி.கே.வாசன் இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தனக்கும் பேராசிரியருக்குமான நெருக்கத்தைப் பற்றி ராசாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

திமுகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரான ராஜேஷ்குமாரும் பேராசிரியரைப் பார்க்க இன்று அப்பலோவுக்கு வந்திருந்தார். ராஜேஷ்குமாரின் தாத்தா ராமசாமி, பேராசிரியரின் அனுக்கமான சீடர். திருச்செங்கோடு நாடாளுமன்றத் தேர்தலில் 1967 இல் பேராசிரியர் அன்பழகன் திமுக வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் காளியண்ண கவுண்டர் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் பேராசிரியர் அன்பழகன் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார். அந்தத் தேர்தலின்போதே ராமசாமி பேராசிரியருக்கு வேலை பார்த்தவர். சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக குடும்ப நண்பர்களாகவே இருந்தவர்கள்.

இப்படி பேராசிரியரைப் பார்க்க அப்பல்லோவுக்கு வருகிற ஒவ்வொருவருக்கும்… பேராசிரியருக்கும் தங்களது குடும்பத்தினருக்குமான நெருக்கம் பற்றி பேச கடந்த ஐம்பதாண்டு வரலாற்றுச் சம்பவங்கள் நிறையவே இருக்கின்றன. வெளியே இவர்கள் பேசிக் கொண்டிருக்க, உள்ளே அந்த வரலாற்றுச் சம்பவங்களின் மையமான பேராசிரியர் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்.

**-ஆரா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share