�ஸ்டாலின் குடும்பத்தை தரக்குறைவாகப் பேசிய திமுக மாசெ – அதிரவைக்கும் ஆடியோ!

Published On:

| By Balaji

திமுக மாவட்டப் பொறுப்பாளர் ஒருவர் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அப்போதைய கொள்கைப்பரப்புச் செயலாளர் ஆ.ராசா மற்றும் நெல்லை திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரை மிக மிகக் கடுமையாக ஆபாசமாக பேசும் ஆடியோ உரையாடல் வெளியாகி திமுகவுக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020 நவம்பர் 4ஆம் தேதி அப்போதைய திமுகவின் இளைஞரணி துணைச் செயலாளராக இருந்த வழக்கறிஞர் துரையை தென்காசி வடக்கு மாவட்டம் என்ற திமுகவின் மாவட்ட அமைப்புக்குப் பொறுப்பாளராக நியமித்தது திமுக தலைமை. இந்த நியமனத்துக்கு ஒரு சில வாரங்கள் முன்பிலிருந்து நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்ற செய்தி உலா வந்து கொண்டிருந்தது.

அதேபோல தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நெல்லை சென்று திமுக நிர்வாகிகளிடம் ஆய்வு செய்தார். இந்த நிலையில்தான் அப்போதைய நெல்லை மாவட்ட திருநெல்வேலி தொகுதி ஐடி விங் அமைப்பாளரான அறிவழகன் என்பவர் அப்போதைய இளைஞரணி துணைச் செயலாளரான வழக்கறிஞர் துரைக்கு போன் செய்கிறார்

நிர்வாகிகள் மாற்றம் இருக்கலாமோ என்ற ரீதியில் பேச்சு கொடுத்து… “மாநகரச் செயலாளர் பதவி உங்களுக்குத்தான் என்று சொல்கிறார்களே?” என்று கேட்கிறார் அறிவழகன். அதற்கு துரை நெல்லைத் தமிழும் நாராச நடையுமாய், ‘எனக்கு எந்த பதவி……. யும் வேணாம்’ என்று ஆரம்பித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ராசா மற்றும் நெல்லை திமுக பிரமுகர்கள் ஆகியோரை மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்க்கிறார்.

தனிப்பட்ட இருவருக்கு இடையிலான இந்த உரையாடலுக்குப் பிறகு வழக்கறிஞர் துரைக்கு தென்காசி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி அளிக்கப்பட்டது. ஆனால், போன் உரையாடலில் தெரிவித்ததற்கு நேர்மாறாக பதவியை அவர் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில்தான்… சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய அந்த ஆடியோ ஓரிரு நாட்களுக்கு முன் அதாவது, விருப்ப மனு நேர்காணலுக்கு முன்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆடியோ வாட்ஸ்அப்பில் பரவிய நிலையில் துரை, வாசுதேவநல்லூர் தொகுதிக்கான நேர்காணலிலும் கலந்துகொண்டு திரும்பியிருக்கிறார். இவரைப் பார்த்து அறிவாலயத்தில் இருப்போரே, “என்ன தைரியம் இருந்தா தலைவர் குடும்பத்தையே ஆபாசமா பேசிட்டு நேர்காணலுக்கு வந்திருப்பாரு” என்று பேசிக்கொண்டனர்.

தென் மாவட்ட திமுக வட்டாரத்தில் பேசியபோது, “துரைக்கும் அப்போதைய ஐடி விங் அறிவழகனுக்கும் உறவு சரியில்லை. அதனால்தான் ஒரு தோதான நேரத்தில் துரையை பேச விட்டு ரெக்கார்டு செய்து வைத்துக்கொண்டார் அறிவழகன். ஒருகட்டத்தில் அறிவழகன் ஐடிவிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். திடீரென சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு மாவட்டப் பொறுப்பாளர் துரை எதிர்ப்பு தெரிவித்தும்கூட அவர் மீண்டும் பதவியில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் விருப்ப மனு நேர்காணல் நேரத்தில் இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. அறிவழகனிடம்தான் துரை பேசியிருக்கிறார். எனவே அறிவழகனைத் தவிர வேறு யாரும் இதை வெளியிட்டிருக்க முடியாது. இதில் அரசியல் இருக்கிறது என்று கருதினாலும் துரை இப்படியெல்லாம் பேசியிருக்கக் கூடாது” என்கிறார்கள்.

துரை இதுகுறித்து விளக்கம் அளிக்க உதயநிதி ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டதாகவும் ஆனால், அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

துரையிடம் சிலர் இதுகுறித்து கேட்டபோது, “அது என் குரலே அல்ல” என்று மறுத்து வருகிறார்.

ஏற்கனவே துரைமுருகன் பற்றி அவதூறாக பேசியதாக கொள்கைப்பரப்புத் துணைச் செயலாளராக இருந்த குடியாத்தம் குமரன் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது ஸ்டாலின் குடும்பத்தை அவதூறாக பேசிய துரையை மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து விரைவில் தூக்கிவிடுவார்கள் என்கிறார்கள் நெல்லை உடன்பிறப்புகள்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share