pசீனியர்கள் பிடியில் அழகிரியின் புதிய அணி

Published On:

| By Balaji

தமிழக காங்கிரஸ் தலைவராக கே. எஸ். அழகிரி நியமிக்கப்பட்டு சுமார் இரண்டு வருடங்கள் நிறைவடைய இருக்கும் நிலையில்… இப்போது தான் அவரால் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிந்திருக்கிறது.

முகுல் வாஸ்னிக் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருந்த வரை நிர்வாகிகள் பட்டியலில் மாற்றம் செய்ய முடியாதவராக இருந்தார் அழகிரி. அண்மையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார்.

இதன் பிறகு ஓரிரு முறை பெங்களூருக்கு படையெடுத்த கே.எஸ். அழகிரி அவரை சந்தித்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகளை மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்றும்… மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தனது ஆதரவாக இருக்கும் பட்சத்தில்தான் தன்னால் இன்னும் வேகமாக செயல்பட முடியும் என்றும் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் கடந்த இரண்டு வருடமாக டெல்லியில் தேங்கிக்கிடந்த அழகிரியின் பட்டியலை இன்று ஓகே செய்து வெளியிட்டுள்ளது டெல்லி தலைமை. அப்படியும் தமிழக காங்கிரஸ் சீனியர்களின் பிடியில் இருப்பது இந்த பட்டியல் மூலம் தெரிகிறது.

மாவட்ட தலைவர்கள் கணிசமானோர் அழகிரியால் நியமிக்கப்பட்டிருந்ததாலும், மாநில பொதுச் செயலாளர்கள் பட்டியலை பார்க்கும்போது காங்கிரஸ் கட்சி மீதான குடும்ப அரசியல் என்ற விமர்சனம் மேலும் வலுவடைகிறது.

திருச்சி ஜி.கே‌. முரளிதரன் போன்ற கட்சிக்காக தொடர்ந்து உழைப்பவர்களுக்கு மாநில பொதுச் செயலாளர் பதவி கொடுத்து கௌரவப் படுத்தியுள்ளார் அழகிரி.

அதே நேரம் மாநில பொதுச் செயலாளர் பட்டியலில் திருச்சி எம்பி திருநாவுக்கரசரின் மகன் எஸ். டி. ராமச் சந்திரன், தங்கபாலுவின் மகன் கார்த்தி தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா உள்ளிட்ட வாரிசுகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

காங்கிரஸின் புதிய பொருளாளராக நாங்குநேரி தொகுதியில் பண மழை பொழிந்த ரூபி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத் தலைவர்களில் அழகிரி ஆதரவாளர்கள் மற்றும் பிற தலைவர்களின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

**வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share