உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது தேர்தலை நடத்த வேண்டாம். மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் குறையும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். அப்போது வேண்டுமானால் தேர்தலை நடத்தலாம். இப்போது தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக நாங்கள் எப்படி உத்தரவிட முடியும். இதே சூழலில் தான் பஞ்சாப், உத்தரப் பிரதேஷ் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடைபெறவுள்ளது. தேர்தலைத் தள்ளி வைப்பதற்கு நாங்கள் உத்தரவிட முடியாது. நீங்கள் உச்ச நீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும்” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் 12 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி, “கொரோனா உச்சத்தில் இருப்பதால் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அதுபோன்று தேர்தலை தள்ளி வைக்கக் கோரி ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், நீதிமன்ற நடவடிக்கைகள் எல்லாம் ஆன்லைனில் நடக்கும் போது தேர்தலை வைத்து பொதுமக்களை நேரில் வரவழைத்து ஓட்டுப்போடச் சொன்னால் கொரோனா மேலும் பரவாதா என்று கேள்வி எழுப்பி வாதிட்டார்.
இதை விசாரித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கும் போது, அதை மீறி உயர் நீதிமன்றம் எப்படி ஒரு உத்தரவைப் பிறப்பிக்க முடியும் என்று மீண்டும் கேள்வி எழுப்பினர்.
மேலும், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் திறந்து தான் உள்ளது. அங்கு மக்கள் வந்து செல்லும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்றும், இதனை நடத்துவதற்கு ஏன் மனுதாரர்கள் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணை தயார் நிலையில் உள்ளது. வழக்குகள் நிலுவையில் இருப்பதால் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். சுகாதாரத் துறையுடன் கலந்து ஆலோசித்த பிறகே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. கொரோனா விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
மதியம் 1.30 வரை விசாரணை நடைபெற்று முடிவடைந்த நிலையில், மதிய உணவுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க மறுப்பு தெரிவித்தனர்.
“அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொரோனா விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், இதில் எந்தவித விதிமீறலும் இருந்தால் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரலாம், அதில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
**-பிரியா**
�,