திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாகக் கூறிய தவறான தகவலுக்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக சார்பில் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக அரசின் 8 ஆண்டுக்கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 8ஆம் தேதி நாமக்கல்லில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்துவிட்டதாகக் கூறினார்.
85 வயதான ஆற்காடு வீராசாமி உயிரோடு இருக்கும் நிலையில் அண்ணாமலை இப்படிப் பேசியது திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவியது. இந்நிலையில் ஆற்காடு வீராசாமியின் மகனும், தி.மு.க எம்.பி.யுமான கலாநிதி வீராசாமி, “தனது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆற்காட்டார் (என் தந்தை) குறித்து எப்போதும் எங்கள் தலைவர்களைப் பற்றி உளறும் பா. ஜ.க. தலைவர் இன்று தவறான கருத்தைக் கூறியதற்கு வேதனையுடன் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார்.
என்ன பேசுகிறோம் அது உண்மையா இல்லையா என்று யோசிக்காமல் பேசும் இவர் ஒரு தலைவர். இது ஒரு கட்சி. நுபுர் ஷர்மா புகழை விரைவில் இவரும் அடைவார்” என்று கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலை தனது தவறான தகவலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார், கலாநிதி வீராசாமியின் ட்வீட்டை டேக் செய்து, “உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்.
நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**