ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று ஏப்ரல் 7ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி முதல்வர் தவிர அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அனைத்து 24 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வரிடம் ஒப்படைத்தனர்.
2019ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி முதல்வர் பதவியை ஏற்கும்போது ஜெகன்மோகன் ரெட்டி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆட்சிக்காலத்தின் இரண்டரை வருட முடிவில் அமைச்சரவை முழுவதுமாக மாற்றி அமைக்கப்படும் என்பதுதான் ஜெகன்மோகன் ரெட்டியின் அந்த அறிவிப்பு.
அதன்படி இரண்டரை வருடங்கள் கடந்த டிசம்பர் மாதமே முடிவடைந்தது. அப்போது கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக அமைச்சரவையை முழுவதுமாக மாற்றி அமைக்க முடியவில்லை.
இந்த நிலையில்தான் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துவிட்டு புதிய அமைச்சர்களுக்கு வழிவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளரிடம் பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த போட்ஸா சத்யநாராயணா, “முதல்வர் ஏற்கனவே முழு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன்படியே ஒவ்வோர் அமைச்சரும் தனது ராஜினாமா கடிதத்தை மகிழ்ச்சியாகவும் தாமாகவே முன்வந்து கொடுத்துள்ளனர்.
2024ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது” என்றார்.
இன்னொரு அமைச்சரான கோடாலி வெங்கடேஸ்வர ராவ், “ஏற்கனவே இருந்த அமைச்சர்களில் சிலர் மீண்டும் புதிய அமைச்சரவையிலும் செயல்பட வாய்ப்பு உள்ளது” என்றார்.
புதிய அமைச்சரவைப் பட்டியலை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் ஆளுநரிடம் சமர்ப்பிப்பார் என்றும் அநேகமாக ஏப்ரல் 11ஆம் தேதி அமராவதி நகரில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது.
ஐந்தாண்டுக் காலம் ஒரே அமைச்சர்கள் தொடர்ந்து பணியாற்றுவதன் மூலம் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அதிகரிக்கும் எனக் கணக்கு போட்ட ஜெகன்மோகன் ரெட்டி, புதிய அமைச்சர்கள் அடுத்த இந்த இரண்டரை வருடங்களில் செயல்பட்டால் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியை பெருமளவு குறைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். ஆட்சி அமைக்கும்போதே இந்த முடிவை எடுத்து அறிவித்த ஜெகன்மோகன் ரெட்டி அதை இப்போது செயல்படுத்தி விட்டார்.
இந்த ஆந்திர மாடல் அமைச்சரவை மாற்றம் தேசிய அளவில் அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது.
**வேந்தன்**
Uஆந்திர மாடல் அமைச்சரவை மாற்றம்!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel