iமோடியை சந்தித்த அன்புமணி: நடந்தது என்ன?

Published On:

| By admin

கடந்த மே 28 ஆம் தேதி பாமக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்புமணி எம்பி அதை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்தார். இந்த நிலையில் நேற்று ஜூன் 9 ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருக்கிறார்.

பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது… பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அந்தப் பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.மேலும் அன்புமணியின் தந்தையும் பாமகவின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸின் உடல் நலத்தையும் விசாரித்துள்ளார் பிரதமர் மோடி.

இந்த சந்திப்பின்போது தமிழக நலன்களூக்கான கோரிக்கைகளையும் பிரதமர் முன் வைத்ததாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டின் நலனுக்காக காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தும்படியும், அதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த வேண்டும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக் கொண்டார். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், அதன் ஒரு கட்டமாக அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதமரிடம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரினார்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்; தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்; ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் முன்வைத்தார். அவற்றை கனிவுடன் பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்தார்” என்று பாமக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில்… அன்புமணியின் இந்த மோடியுடனான சந்திப்பு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இருபது நிமிடங்களுக்கு நீடித்த சந்திப்பை அடுத்து இன்று சென்னையில் ஆன் லைன் சூதாட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கிறார் அன்புமணி.’
-**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share