ஸ்டாலின் ஆட்சிக்கு வரப்போகிறாரா? சிரித்த எடப்பாடி

Published On:

| By Balaji

2021ஆம் ஆண்டுக்குப் பிறகும் அதிமுக ஆட்சிதான் தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (பிப்ரவரி 24) நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்வுகளை முடித்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அங்கிருந்து விமானத்தில் கோவை வந்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னை, கோவை ஆகியவை பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய நகரங்களாக இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில் கூட சாலைகளில் பெண்கள் தைரியமாகச் செல்லும் நிலையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதன் விளைவாக குற்றங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

என்.பி.ஆர் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “மக்கள் தொகை கணக்கெடுப்போடு என்.பி.ஆரும் எடுக்கப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்த மத்திய அரசில்தான் என்.பி.ஆர் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2011ஆம் ஆண்டு என்.பி.ஆரை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியது திமுகதான். ஆட்சிக்கு இடையூறு செய்யும் விதமாக அரசியல் லாபத்திற்காக சிறுபான்மையின மக்களிடையே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்தியைப் பரப்பிவருகிறார்கள்.

என்.பி.ஆரில் ஏற்கனவே இருந்ததோடு மொழி, தாய் மற்றும் தந்தை வசித்த இருப்பிடம், ஆதார், வாக்காளர் மற்றும் குடும்ப அடையாள அட்டைகள் ஆகிய மூன்றிற்கான ஆதாரங்களை கூடுதலாகக் காட்ட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவரம் தெரிந்தாலோ, ஆதாரம் இருந்தாலோ சொல்லலாம், இது கட்டாயம் அல்ல என்று மத்திய சட்ட அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். 2011 திமுக ஆட்சியில் என்ன கணக்கெடுப்பு நடந்ததோ அதைத்தான் தற்போதும் நடத்துகிறார்கள். மற்ற மூன்று கேள்விகளுக்கும் விரும்பினால் சொல்லலாம், விருப்பமில்லை எனில் சொல்ல வேண்டாம்” என்று தெரிவித்தார்.

தமிழக அரசின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “திமுக ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியதே எந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. திமுக வாங்கிய கடனுக்கு நாங்கள் தொடர்ந்து வட்டி செலுத்திவருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

சுபஸ்ரீ மரணம், பொள்ளாச்சி சம்பவம் ஆகியவற்றை மறைக்கவே மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா பிறந்தநாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாரே என்று கேட்க, “ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளின்போது ஒவ்வொரு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. அதுபோலவே இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றே கால் ஆண்டுகள் அதிமுக ஆட்சி தொடரும். அடுத்தும் அம்மாவின் ஆட்சிதான் தொடரும். ஸ்டாலின் என்ன ஆட்சிக்கா வரப்போகிறார்” என்று சிரித்தபடியே பதில் கூறியவர், ஸ்டாலின் எப்போதும் முதல்வர் கனவில் இருப்பதாகவும் சாடினார்.

**த.எழிலரசன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share